Home » நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக பெருவிழா

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக பெருவிழா

by sachintha
May 16, 2024 1:02 pm 0 comment

மயூரபதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் தீர்த்த ஊர்வலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18.04.2024 சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு இடம்பெறவுள்ளது.

சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவில் சீதை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. சீதை அம்மன் சிலைக்கு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபடுகளைத் தொடர்ந்து, சீதை அம்மன் சிலை மற்றும் இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட எட்டு கலசங்கள் ஆகியன சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சீதையம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு காணவுள்ள கலசங்கள் அனைத்தும் கோயம்புத்தூர் நகரில் உள்ள பக்தர்களால், கோயம்புத்தூரில் திருப்பணி செய்யப்பட்டு, இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சீதையம்மன் ஆலயத்தில் எழுந்தருளவுள்ள உற்சவமூர்த்தி சிலையை இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள ‘லலிதாம்பிகை நிறுவனம்’ திருப்பணி செய்து வழங்கியுள்ளது.

லலிதாம்பிகை நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுவாமி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி அவர்களும் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. தீர்த்த ஊர்வல வாகனம் மயூரபதி ஆலயத்தால், சுமார் 2.5 மில்லியன் ரூபா செலவில் வடிவமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக மயூரபதி ஆலய அறங்காவர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

மயூரபதி ஆலயத்தில் காலை 7 மணிக்கு இடம்பெறும் சிறப்புப் பூஜை வழிபாடுகளில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, இந்து – பெளத்த மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். மயூரபதி ஆலயத்தில் இடம்பெறும் பூஜைகளைத் தொடர்ந்து முதலாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகம், காலிமுகத்திடல் ஊடாக பிரதான வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவல, அவிசாவளை, யட்டியாந்தோட்டை, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா, தவலந்தனை சந்தி ஊடாக இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தைச் சென்றடையும்.

சனிக்கிழமை (18.05.2024) இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் காலை 7 மணிக்கு இடம்பெறும் பூஜைகளை வழிபாடுகளைத் தொடர்ந்து இரண்டாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, லபுக்கலை, நுவரேலியா ஊடாக, நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை சென்றடையும்.

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்காக இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் சரயு ஆற்றில் இருந்து புனிதநீர் 25 லீற்றர் கொண்டு வரப்பட்டுள்ளது. இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவில் 19ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து சிறப்பிக்கவுள்ளார். வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். குருஜியுடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

பேராசிரியர் கலாநிதி இராமசீனிவாசன், ஸ்ரீ முகேஷ்குமார் மேஸ்வரன் (செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சு, உத்தரப்பிரதேசம்), ஸ்ரீ சந்தோஷ் குமார் சர்மா (ஆணையாளர்,அயோத்தி நகர சபை) உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் வருகை தரவுள்ளனர்.

திருப்பதியில் இருந்து, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 5000 லட்டுகள் இந்திய கலாசார மையம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் ஜனக்பூர் நகரத்தில் புகழ்பெற்ற ஜானகி கோயில் (சீதை கோயில்) அமைந்துள்ளது. நேபாளத்தின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாகவும், சீதையின் பிறப்பிடமாகவும் உள்ள ஜனக்பூர் நகரத்தில் இருந்து கும்பாபிஷேகப் பெருவிழா காணும் நுவரெலியா சீதையம்மனுக்கு சீர்வரிசை வருவது இலங்கை – இந்திய_ நேபாள நாடுகளின் கலாசார பெருமையை பறைசாற்றுகிறது.

–உமாச்சந்திரா பிரகாஷ்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT