Home » தன்னிறைவு பொருளாதாரமே நாட்டுக்கு நன்மை தரும்

தன்னிறைவு பொருளாதாரமே நாட்டுக்கு நன்மை தரும்

by sachintha
May 16, 2024 6:01 am 0 comment

பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தையும் தன்னிறைவையும் அடைந்து கொள்வதில் ஒவ்வொரு நாடும் விரும்புகின்றன. அதனை இலக்காகக் கொண்டு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களையும் அவை முன்னெடுக்கின்றன.

அந்த வேலைத்திட்டங்களில் சில தோல்வியுற்று சில முழுமையான வெற்றியை அளிக்காவிட்டால் சில நாடுகள் அவ்வேலைத்திட்டங்களை இடைநடுவிலேயே கைவிட்டு விடுகின்றன. இன்னும் சில நாடுகள் அந்த வேலைத்திட்டங்களை அந்த இடத்தோடு இடைநிறுத்தி விடுகின்றன.

ஆனால் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட நாடுகள் தம் வேலைத்திட்டங்கள் தோல்வியுற்றாலும் அல்லது முழுமையான வெற்றியை அளிக்காவிட்டாலும் தம் இலக்கில் உறுதியாக செயற்படுகின்றன. அதன் ஊடாக பல நாடுகள் பொருளாதார முன்னேற்றங்களை அடைந்து கொண்டுள்ளன.

அதேநேரம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிரம்பப் பெற்றவையாக உலகில் சில நாடுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வளங்களையும் கொண்டவையாக இல்லை.

அதனால் நவீன உலகில் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய வழிமுறைகளில் ஒன்றாக கடன் பெறுதல் விளங்குகிறது. இதனைப் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் ஒரு சில நாடுகள் தான் கடன் பெறுதல் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள் கடன் சுமைக்குள் சிக்குண்டு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. அந்த நாடுகள் கடனிலேயே தொடர்ந்தும் தங்கி இருகின்றன.

இவ்வாறான பின்னணியில்தான் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு கடன் மூலம் முன்னெடுக்கப்பட்ட சில உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்பார்த்த பிரதிபலன்களை அளிக்கத் தவறின. அதனால் நாட்டின் கடன் சுமை அதிகரித்ததோடு பொருளாதார வீழ்ச்சிக்கும் அது வித்திட்டது.

அந்த இக்கட்டான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத துரதிர்ஷ்டகர நிலை ஏற்பட்டது. அச்சமயம் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைளை ஏற்றார். அத்தோடு நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். அதன் பிரதிபலன்களை மக்கள் குறுகிய காலம் முதல் அனுபவிக்கத் தொடங்கினர். அதன் ஊடாக பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் நாடு அனுபவித்த அசௌகரியங்கள் பெரும்பாலும் நீங்கலாயின.

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சி பெற்று நம்பிக்கை தரும் வகையில் மறுமலர்ச்சி பாதையில் பிரவேசித்துள்ள நாடு, பங்களாதேசத்திடம் இருந்து பெற்ற கடனையும் திருப்பி செலுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இணக்கம் காணப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள நாடுகளும் ஏனைய தனியார் நிறுவனங்களும் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை அளித்துள்ளன. அக்கடன்கள் மீளச்செலுத்தப்பட வேண்டும். அதில் இருந்து விடுபட முடியாது. அந்தவகையில் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள நாடுகளுடனும் நிறுவனங்களுடனும் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. அப்பேச்சுவார்த்தைகளில் முதலாம் கட்டம் நிறைவடைந்துள்ளன.

இவ்வாறான சூழலில் அத்துருகிரிய தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘எந்நாளும் கடன்பெற்று வாழ முடியாது என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதற்கு தேவையான சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது’ என்றுள்ளார்.

உண்மையில் எந்த நாளும் கடன் பெற்று வாழ முடியாது. அதனால் கடன் இன்றி வாழ்வதற்கு ஏற்ப பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு முயற்சிகளும் அதற்கான வேலைத்திட்டங்களும் இன்றியமையாததது.

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் நாட்டை பொறுபேற்ற சமயம், நாட்டில் விவசாய உற்பத்திகள் இடம்பெறவில்லை. இரசாயனப் பசளைப் பாவனை தடை செய்யப்பட்டு இயற்கை பசளை ஊக்குவிப்பு முன்னெடுக்கப்பட்டதால் விவசாயிகள் விவசாய உற்பத்திகளைக் கைவிட்டிருந்தனர். இந்நிலையில் 2022, 2023 வருடங்களில் விவசாய உற்பத்திகளின் வெற்றியை இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பிரதிபலனாக அவ்வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. அதன் ஊடாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியான நிலையை நாடு பெற்றுக் கொண்டமை இதற்கு நல்ல உதாரணமாகும்.

ஆகவே கடனின்றி தன்னிறைவுப் பொருளதாரத்தை அடைவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அதுவே நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பக்கபலமாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT