Saturday, November 2, 2024
Home » ரஷ்ய போருக்கு சென்றுள்ள இலங்கையர் பற்றி ஆராய விசேட குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய போருக்கு சென்றுள்ள இலங்கையர் பற்றி ஆராய விசேட குழு ரஷ்யாவிற்கு

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்

by Rizwan Segu Mohideen
May 16, 2024 2:36 pm 0 comment

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்யாவின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்:

தற்போது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள். ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்விதான் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி ரஷ்யாவில் 600-800 வரையிலானவர்கள் அல்லது அதற்கு அதிகமானவர்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், ரஷ்யாவில் இருக்கும் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் போரில் பங்கேற்றிருப்பது தொடர்பில் தகவல் வௌிப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி. ரஷ்யாவில் இவர்கள் தங்கியிருக்கும் பிரதேசம் தொடர்பில் அறிய முடியாமல் இருப்பதே தற்போதைய சிக்கலாகும்.

ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆள் கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிய கிடைத்துள்ளது. இந்த ஆள்கடத்தல் செயற்பாடுகளில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

எவ்வாறாயினும் ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலைமையை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். பின்னர், இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி அங்கு சென்றுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என நம்புகிறோம். அரசாங்கம் அதற்காக முழுமையாக அர்பணிக்கும்.

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையிலும், ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்கான விஷேட தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்ய தூதுவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ரஷ்ய கூலிப்படை விவகாரம்: ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x