கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் 100 அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து 2 மணிநேரங்களில் செய்ய வேண்டிய மணப்பெண் அலங்காரத்தை 20 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த அதேவேளை, மேலும் சிலர் ஊசியைப் பயன்படுத்தி செய்யும் மிகவும் நுட்பமான எம்பிராய்டரி வகையான ஆரி வேர்க் கலையில் ஏ4 தாளில் இலங்கையின் வரைபடத்திற்குள் சிங்கத்தை 20 நிமிடங்களில் வரைந்தனர்.
மேலும் சிலர் மெஹந்தி மூலம் 20 நிமிடங்களில் இரண்டு கைகளிலும் அலங்காரமிட்டு சாதனை படைத்தனர்.
இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை கீர்த்தி ஜே அழகுக்கலை மையத்தின் உரிமையாளர் கீர்த்திகா ஜயசிங்க ஒருங்கிணைத்து நடத்தினார்.
சோழன் உலக சாதனை நிகழ்வின் பல்வேறு ஒழுங்குகளை பீபில்ஸ் ஹெல்பிங், பீபில்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
வழங்கப்பட்ட 20 நிமிடங்களில் தமது இலக்கை நிறைவு செய்த 100 அழகுக்கலை நிபுணர்களுக்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் பேச் போன்றவற்றை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ஜக்கிய மக்கள் சுகந்தியின் பிரதிசெயலாளர் உமாச் சந்திரபிரகாஷ் ஆகியோர் வழங்கிப் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வைக் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழகுக் கலை நிபுணரான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன் மற்றும் அழகுக்கலை நிபுணர் அஜய் அவினாஷ் போன்றோர் வந்திருந்தனர்.
மேலும், நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் நாகவாணி ராஜா, பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா, பீபல் ஹெல்பிங், பீபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் க்ளோரன்ஸ் சாமுவேல் மற்றும் அவருடைய இணையரான திருமதி. க்ளோரன்ஸ் சாமுவேல், ரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி, அனுராதபுரம் மாவட்டத் தலைவர் அமில திசாநாயக்க, நுவரெலியா மாவட்டத் தலைவர் சதீஸ், மாத்தறை மாவட்டத் தலைவர் ருக்சான் ஜயசுந்தர, கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜீயசுதர்சன் மற்றும் கண்டி மாவட்டத் தலைவர் சந்திரகுமார் போன்றோர் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை கண்காணித்து உறுதி செய்தனர்.
சோழன் உலக சாதனை படைத்த அழகுக்கலை நிபுணர்களை அந்நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், அந்த அமைப்பின் பன்னாட்டு ரீதியிலான தலைவர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் பிரான்சிஸ் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்