இஸ்ரேல் பிரதமரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டுமென்ற தென்னாபிரிக்காவின் கோரிக்கைக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பாலஸ்தீன் ஆக்கிரமிப்புக்கான எதிர்ப்பு உலகில் பல நாடுகளிலும் தற்போது இடம்பெற்று வருகின்றன. மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது.
அன்று யூதர்கள் கொல்லப்பட்ட அதே வழியில், இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனர்களை கொலை செய்வதற்கான நடவடிக்கைகளை கட்டவிழ்த்துள்ளது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இஸ்ரேல் தொடர்பில் ஒட்டுமொத்த உலகமும் பேசமுடியாது திராணியற்றுள்ளன. எந்த பலஸ்தீனியரும் அந்த பிரதேசத்தில் இருக்கக்கூடாது என்ற சித்தாந்தத்திலேயே இஸ்ரேல் செயற்படுகிறது. ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருக்கும் அனைவரையும் விடுவித்தால், யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தததற்கிணங்க, கட்டார், எகிப்து, அதில் தலையிட்டு ஹமாஸுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதற்கமைய அந்த நிபந்தனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், இஸ்ரேல் பிரதமர் யுத்த நிறுத்தத்தை நிராகரித்தார்.இப்பின்னணியில் இஸ்ரேல் அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென்ற தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக எகிப்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.