காஸாவின் இன்றைய நிலை மிக மோசமாக காணப்படும் நிலையில், உலக சமாதானத்தை கருத்திற் கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல நாடுகளும், தலைவர்களும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பலஸ்தீனம் – இஸ்ரேல் யுத்தத்திற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனினும், பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாக அமையாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ;
பலஸ்தீன் -இஸ்ரேல் முரண்பாட்டுக்கு தீர்வு காண உலக நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தலையிட வேண்டும். பலஸ்தீனர்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
யுத்தத்தால் பலஸ்தீன மக்கள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பலஸ்தீன விவகாரத்தில் அவதானம் செலுத்தியதற்கு இந்த உயரிய சபைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இலங்கை- பலஸ்தீன ஒத்துழைப்பு சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து பலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்தோம்.அன்று முதல் இன்று வரை பலஸ்தீனர்களின் நலனுக்காகவே செயற்படுகிறோம்.
நாடு என்ற ரீதியில் பிளவுபடாத கொள்கையில் இருந்தாலும்,உலக சமாதானத்தை கருத்திற் கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல நாடுகளும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். சுமார் 70 வருடகாலமாக தொடரும் பலஸ்தீன -இஸ்ரேல் பிரச்சினையை, பூகோள அரசியல் தொடர்பில் தெளிவுள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.
பலஸ்தீனத்தை 1988 ஆம் ஆண்டு தனி இராச்சியமாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.அன்றிலிருந்து இன்று வரை பலஸ்தீனத்துக்கு தனித்த சுயாட்சி வேண்டும் என்பதை பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறோம்.
அரச தலைவர் என்ற ரீதியில் அக்காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உரையாற்றுகையில் பலஸ்தீனத்தின் சுதந்திரம் மற்றும் சுயாதீனம் தொடர்பில் குரல் கொடுத்துள்ளேன்.உலக நாடுகளின் தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்து,இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
2017 இல், பலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் விஜயம் மேற்கொண்டு அமைதி மற்றும் சமாதானத்துக்காக இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன் காஸாவின் இன்றைய நிலை அவலமானது. 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்ட எமக்கு காஸாவின் இன்றைய அவல நிலையை விளங்கிக் கொள்ள முடியும்.யுத்தத்தால் பெரியவர்கள் மாத்திரமல்ல பச்சிளம் குழந்தைகளும் நாளாந்தம் மரணிக்கின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளார்கள். தாக்குதலின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்குண்டுள்ளவர்களை மீட்டெடுக்கும் காணொளிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையை கண்டு அனைவரும் கண்ணீர் சிந்துவர்.
தெற்கு காஸாவில் உள்ளவர்களுக்கு கடந்த வாரம் உணவு மற்றும் நீர் கிடைக்கவில்லை. 3 இலட்சத்து 60 ஆயிரம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவத்தினர் தெற்கு காஸா எல்லை பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். குறுகிய காலத்துக்குள் சுமார் 50 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாகியுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இதனூடாக பலஸ்தீனத்தின் கொடூரமான நிலையை விளங்கிக் கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.