Thursday, July 25, 2024
Home » கோறளைப்பற்று சாதனைப் பெண்கள் 21 பேர் விருது வழங்கி கௌரவிப்பு

கோறளைப்பற்று சாதனைப் பெண்கள் 21 பேர் விருது வழங்கி கௌரவிப்பு

வாழைச்சேனை பொதுசன நூலக ஏற்பாட்டில் விமரிசையான விழா

by mahesh
May 15, 2024 1:10 pm 0 comment

வாழைச்சேனை பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் ‘கோறளைப்பற்றின் சாதனைப் பெண்கள்_-2024’ எனும் மகுடத்தின் கீழ் இப்பிரதேசத்தினைச் சேர்ந்த, கல்வியில் முன்னேறி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 21 பெண்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவினை திட்டமிட்டு, இதற்கான நிதி அனுசரணை, விழா மண்டப வடிவமைப்பு போன்ற பணிகளை அ.ஸ்ரீதருடன் இணைந்து நூலகத்தின் உத்தியோகத்தர்களான த.தாரணி, சி.சிவனேஸ்வரி, து.தனுஜா, அ.ஆயிஷா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவுக்கான அனுசரணையினை வாழைச்சேனை ஐ.டி.ஸ்பேஸ் மற்றும் தங்கமஹால் ஜுவலரி, தமிழ்த்தாய் புத்தக இல்லம் ஆகிய நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

பிரதேசசபையின் செயலாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக வாழைச்சேனையைச் சேர்ந்தவரும், கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக வாழைச்சேனையைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவருமான கலாநிதி துஷ்யந்தி லவன் கலந்து சிறப்பித்தார்.

இவர்களுடன் விருதுபெற்ற ஏனைய சாதனைப் பெண்களான சீ.லோகேஸ்வரி (கல்வி), அருந்ததி சுந்தரமூர்த்தி (கல்வி), விஜிதா முருகவேள் (கல்வி), ஸோபா ஜெயரஞ்சித் (கல்வி), மேகலா சிவகுமாரன் (கல்வி), பொற்செல்வி சுஜித்தலால் பீரிஸ் (இலக்கியம், நடனம்), சந்திரன் விஜிதா (சட்டம்), சுஜா எல்விஸ் (சட்டம்), வேணுகா அருட்செல்வம் (மருத்துவம்), பிரஸன்னியா சிவஞானசேகரம் (மருத்துவம்), சுஷ்மிதா மகாலிங்கம் (மருத்துவம்), ஷாலினி பன்னீர் (மருத்துவம்), சிவநேசன் சந்துஜா (மருத்துவம்), நிலு உதயகுமார் (இசை), மிலுக்சா அருளானந்தன் (சட்டம்), நிலுக்ஸா தேவராசா (பொறியியல்), அருள்ரதி சுப்பிரமணியம் (சட்டம்), தனுஷி கோபிஜன் (சட்டம்), அர்ச்சனா அகிலன் (கணினி மென்பொருள்) ஆகியோருடன் விருதுக்குரிய சாதனைப் பெண்களின் குடும்பத்தினர், நூலக உத்தியோகத்தர்கள், வாசகர் வட்டத்தினர் எனப் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நூலகப் பொறுப்பாளர் தாரணி தங்கத்துரை அவர்களது வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் போன்றவற்றினைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய செயலாளர், வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியில் சாதித்த பெண்மணிகளை ஒருசேர இவ்விழாவில் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள நூலக உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர், சாதனைப் பெண்களுக்கு விருதுகளை வழங்கி வைத்து உரைநிகழ்த்தினார். தனது சொந்த ஊரில் கல்வியில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கின்ற புதியதொரு நிகழ்வினை வாழைச்சேனை பொதுசன நூலகம் நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும், நூலகத்திற்கும் சமூகத்திற்குமான தொடர்பினை இது இன்னும் வலுப்படுத்தும் எனவும், பெண்களைக் கௌரவிக்கும் விழாவினை நடத்துகின்ற நூலக உத்தியோகத்தர்களை மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கான விருதினை பிரதேச சபையின் செயலாளரும் நூலக உத்தியோகத்தர்களும் வாசகர் வட்டத்தினரும் இணைந்து வழங்கி வைத்தனர்.

அதனையடுத்து, கலாநிதி துஷ்யந்தி லவன், ஒரு தொகுதி சாதனைப் பெண்களுக்கு விருதுகளை வழங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

சாதனைப் பெண்களின் சார்பில் விஜிதா முருகவேள், ஸோபா ஜெயரஞ்சித் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். கவிஞரும் பேச்சாளருமான தமிழூராள் அனுஸ்திக்கா நிகழ்வினை தொகுத்து வழங்கினார். அம்றிதா ஜெயரஞ்சித் சாதனைப் பெண்களை வாழ்த்தி கவிதை பாடினார். ‘ப்ரணவாலயா கலாமித்ரம்’ நடனப்பள்ளி சார்பாக நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச தாய்மொழி தினப்போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கான பரிசுகளும் விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டன.

எஸ். ஏ. ஸ்ரீதர்
(வாழைச்சேனை தின௧ரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT