Tuesday, May 28, 2024
Home » ஊடகத்துறை முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸடீன் வெற்றிவிழா கொண்டாட்டம், ஞாபக முத்திரை வெளியீடு

ஊடகத்துறை முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸடீன் வெற்றிவிழா கொண்டாட்டம், ஞாபக முத்திரை வெளியீடு

by mahesh
May 15, 2024 7:00 am 0 comment

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி சேகு இஸ்ஸடீனின் 80ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிவிழாக் கொண்டாட்டமும் ‘வரலாறாகும் வேதாந்தி’ என்ற பாராட்டு நிகழ்வும், அவரின் நினைவாக வெளியிடப்பட்ட விசேட முத்திரை வெளியீடும் அக்கரைப்பற்று கடற்கரை கொக்கோ கார்டன் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) சட்டத்தரணி ஜமால்தீன் சர்ஜூன் தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய சட்டத்தரணி சர்ஜூன் தனதுரையில்,”அரசியல் கலாசாரத்திற்கு அப்பால் தற்போதைய இளைஞர் சந்ததியினர் சேகு இஸ்ஸடீன் அவர்களின் வாழ்வியலை அறிந்திருக்க வேண்டும் என்பதனாலாகும். இளைஞர்கள் கல்வியை கற்று சமூகத்தில் நற்பிரஜைகளாக வர வேண்டும் அவர்களுக்கான வழிகாட்டியாக நான் இருக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்தவர் அவர். கல்வி கற்கும் சமூகத்தை நேசிக்கும் ஒரு தலைவராக இவரை நாம் காண்கிறோம். அவரது சிந்தனையில் விளைவுதான் நாமும் கல்வியலாளராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.ரீ.ஹஸன் ளைலி உரையாற்றுகையில்,

“மறைந்த எமது தலைவர் மர்ஹூம் அஷ்ரப், முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஆகியோரோடு நாங்கள் எல்லோரும் ஒரு கட்சியில் இருக்கும் போது தென்கிழக்கு அலகு பற்றி அதிகமாக பேசி இருக்கின்றோம். அந்த நேரத்தில் சேகு இஸ்ஸதீன் இது தொடர்பில் அதிகமாக பேசியுள்ளார். எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியம் அடையவுள்ள நன்மை தீமைகளையும், அதிகாரப் பரவலாக்கல் மூலம் ஏற்படப்போகும் பிரிவினைகளை பற்றியும் அவர் சூசகமாக அப்போது தெரிவித்தார். அவர் அரசியலில் தற்போது இருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தார். இவரின் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் தற்போது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்றார்கள்” என்றார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் எப்.எம் உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.தாஜ் உரையாற்றுகையில், “சேகு இஸ்ஸதீன் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு அதன் சின்னமான மரத்தை தெரிவு செய்து தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தவராவார். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களோடு இக்கட்சியின் வளர்ச்சியிலும், எதிர்கால முஸ்லிம் சமூகம் தொடர்பிலும் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டார். அற்ப அரசியல் இலாபங்களுக்காக இக்கட்சியையும் இச்சமூகத்தையும் பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடம் அடைமானம் வைக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறினார்.

20 ஆம் திருத்தத்துக்கு நாங்கள் எதிர்ப்பு என்று சொல்லி பாராளுமன்றத்திற்குள் சென்ற எம்.பிக்கள் இரண்டு மணித்தியாலத்திற்குள் தங்களது எண்ணம் மாறி அதன் பிறகு அதற்கு ஆதரவாக வாக்களித்தமையான சம்பவத்தைப் பார்க்கும் போது, இரண்டரை வருடத்திற்குள் என்ன மாற்றங்கள் எல்லாம் வரும் என்பதை அன்றே சேகு இஸ்ஸதீன் அவர்கள் தெளிவாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அதேபோல், 1997ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, சேகு இஸ்ஸதீன் அவர்கள் ஒரு தீர்க்கதரிசனமான விடயத்தைச் சொன்னார். ஒலுவிலில் தேசிய துறைமுகம் அமைக்கப்படுவதால் இச்சமூகத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி உரையாற்றினார். தற்போது சமகாலத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தை கடல் காவுகொள்வதைப் பார்க்கின்றோம். இதனை அவர் அன்று தெரிவித்தார். நாம் இன்று அது தொடர்பில் கண்ணீர் வடிக்கின்றோம்.

ஒலுவிலில் தேசிய துறைமுகம் அமைக்கின்ற தீர்மானத்தை கைவிடுங்கள் என்று அந்த நேரத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களோடு இஸ்ஸதீன் சேர் மிகவும் ஆணித்தரமாக விளக்கினார். இது அமையுமாக இருந்தால் ஒலுவில் பிரதேசம் பல இழப்புக்களை இழக்க நேரிடும். இப்பிரதேசம் பெரும்பான்மை மயமாகும். மீன்பிடித் தொழில் அடியோடு அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்படும். இங்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்புக்களின் வீதம் முஸ்லிம்களுக்கு எட்டு வீதம்தான் வழங்கப்படும். ஆகையால் மருதமுனை தொடக்கம் பொத்துவில் வரையிலுள்ள ஏதாவதொரு ஊரில் மீன்பிடித் துறைமுகம் அமைத்தால் எமக்குப் போதும் என்று தெரிவித்தார்.

ஆனால் தலைவர் அஷ்ரப்பைச் சார்ந்தவர்கள் அதனைத் தெரிந்து கொள்ளவில்லை. ஒலுவில் பிரதேச மக்களுக்கு இதனை தெளிவுபடுத்தும் வகையில் கூட்டங்களை போட்டு அறிவுரை வழங்கினோம். ஆனால் அந்த மக்கள் எங்களுக்கு கல் எறிந்தார்கள், எங்களை விரட்டினார்கள். தற்போது என்ன நடந்துள்ளது? அந்தப் பிரதேசத்தில் இருந்த காணிகள் இழக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழில் இழந்துள்ளது. இப்போது அந்த மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். அது மாத்திரமின்றி, இந்த தேசிய துறைமுகம் தற்போது மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே சமூகத்தைப் பற்றி சிந்தித்து இந்த சமூகம் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக அடையவுள்ள விளைவுகளையும் தூரநோக்கு சிந்தனையுடன் தெரிவித்தவர்தான் சேகு இஸ்ஸதீன்” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அல்- ஹாபீழ் என்.எம்.அப்துல்லா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் என்.ரீ.ஹஸன் அலி, மு.கா அதி உயர்பீட உறுப்பினர் ஏ.எல்.தவம், தென்றல் உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.தாஜ், சேகு இஸ்ஸதீன் அவர்களின் பாரியார் நாதிரா சேகு இஸ்ஸதீன் மற்றும் கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT