Home » தொழிற்சங்க நடவடிக்கைகள் பொருளாதாரத்தை பாதிக்கும்

தொழிற்சங்க நடவடிக்கைகள் பொருளாதாரத்தை பாதிக்கும்

by mahesh
May 15, 2024 6:00 am 0 comment

நாட்டின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அரச ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து அண்மைக் காலமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சில வாரங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர். அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இருந்தும் கூட தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தம் கோரிக்கைகளின் நிமித்தம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நேற்றுமுன்தினம் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க நிறைவேற்று உத்தியோகத்தர்கள், சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் சட்டபடி வேலை இயக்கத்தை ஆரம்பிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருக்கின்றனர்.

இவை இவ்வாறிருக்க, கிராம உத்தியோகத்தர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கிராம உத்தியோகத்தர்களின் ​சேவை ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான ஒன்று என்பதை மறந்து விடலாகாது.

அதேநேரம் அரசாங்க வைத்தியசாலைகளில் கடமை புரியும் சுகாதார மருத்துவ சேவை சார்ந்த உத்தியோகத்தர்கள் நேற்றுமுன்தினம் கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் விளைவாக வைத்தியசாலைகளின் வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு, அப்பாவி நோயாளர்களும் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

இவ்வாறு கடந்த சில வாரங்களாக இந்நாட்டின் அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி மீட்சி பெற்றுவரும் நாடொன்றுக்கு இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரோக்கியமானவை அல்ல.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விரிவான அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வேலைத்திட்டங்களின் பயனாக நாடு குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெற்று முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் பயனாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாட்டில் நிலவிய பொருளாதார அசௌகரியங்களும் நெருக்கடிகளும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. என்றாலும் அந்த நெருக்கடியின் தாக்கங்கங்கள் காணப்படவே செய்கின்றன. இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து முழுமைாக மீட்சி பெறுவதற்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றம் இன்றியமையாததாகும்.

அந்த வகையில் நாட்டில் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டங்கள் வெற்றி அளிப்பதற்கும் இந்த வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கும் நாட்டின் அனைத்து குடிமக்களும் முழுமையான பங்களிப்பை நல்குவது அவசியம். அவர்களில் அரசாங்க ஊழியர்களும் அடங்குகின்றனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்றுவரும் தேசத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க வேண்டிய முக்கிய பொறுப்பை கொண்டவர்களாக அரச ஊழியர்கள் விளங்குகின்றனர்.

இருந்தும் கூட அரசாங்க ஊழியர்களில் சிலர் தங்களது பொறுப்பை உணராதவர்களாக செயற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாடு முழுமையாக மீட்சி பெற்றிராத சூழலில் அடையாள வேலைநிறுத்தம், சட்டப்படி வேலை இயக்கம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருளாதார முன்னேற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும்.

நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு அமைய அரச ஊழியர்களது கோரிக்கைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப நாடு பெற்றுக்கொள்ளும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு அமைய அதன் பிரதிபலன்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரதிபலன்களை இந்நாட்டின் குடிமகன் என்ற வகையில் அரச ஊழியர்களும் அனுபவிக்கவே செய்கின்றனர். அதற்கு மேலதிகமாக அரச ஊழியர்கள் என்ற அடிப்படையில் சம்பள உயர்வு உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்படவே செய்கின்றன.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி நம்பிக்கை தரும் வகையில் மீட்சி பெற்று முன்னேற்றப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள நாட்டில் அடிக்கடி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாட்டுக்கு நல்லதல்ல. அந்த நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடி பலமடையக்கூட துணைபுரியலாம்.

ஆகவே அரச ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்களுக்கு பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியதாக அமையும். இதைவிடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கவே வழிவகுக்கக் கூடியதாக அமையும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT