Tuesday, May 28, 2024
Home » “நம்பிக்கை கொண்டோர் மீட்புப் பெறுவர்”

“நம்பிக்கை கொண்டோர் மீட்புப் பெறுவர்”

விண்ணேற்புப் பெருவிழா தரும் சிந்தனை

by gayan
May 14, 2024 8:40 am 0 comment

இயேசுவின் விண்ணேற்புப் பெரு விழாவை கத்தோலிக்கத் திருச்சபை நேற்று கொண்டாடியது.

இப்பெருவிழாவானது நாமும் இவ்வுலக வாழ்வின் முடிவில் இயேசுவைப்போல் விண்ணகம் செல்வோம் என எமக்கு எடுத்துரைக்கும் ஒரு முன்னடையாளமாகும்.

நாமும் விண்ணேற்படைய கிறிஸ்து விட்டுச்சென்ற அன்புப் பணியை அவரது நற்செய்தியின் வழியில் வாழ்ந்து, பிறரையும் ஊக்கப்படுத்திட திருச்சபை எம்மையழைக்கின்றது.

இயேசு விண்ணேற்படைந்ததையும் தூய ஆவியின் வருகை தொடர்பான இயேசுவின் முன்னறிவிப்பையும், ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை சம்பந்தமான வானதூதரின் அறிவிப்பையும் திருத்தூதர் பணி நூலில் புனித லூக்கா விளக்குகின்றார்.

பெருவிழா தின இரண்டாம் இறை வாசகத்தில் எமக்கு கடவுளிடமிருந்து அருளப்பட்டுள்ள வெளிப்பாடு, அதன் அழைப்பு, கிறிஸ்தவ வாழ்வின் எதிர்நோக்கு பற்றி தூய பவுல் எபேசியருக்கு எழுதும் கடிதம் காணப்படுகிறது.

“நம்பிக்கை கொண்டோர் மீட்புபெறுவர், நம்பிக்கையற்றோர் தண்டனை தீர்ப்பு பெறுவர்” என்று மாற்கு நற்செய்தியில் கூறும் இயேசு நாம் அனைவரும் கடவுளின் மீட்புத்திட்டத்தை அறிந்தவர்களாக எதிர்நோக்குடன் வாழ எம்மையும் அழைக்கின்றார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4ஆம் அதிகாரம் 1–13 வசனங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

“சகோதரர் சகோதரிகளே,ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே;

அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், ‘அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’ என்று மறைநூல் கூறுகிறது. ‘ஏறிச் சென்றார்’ என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா?

கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டியெழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.

அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என அந்த வாசகம் நமக்குத் தெரிவிக்கின்றது.

மாற்கு நற்செய்தியின் 15 ஆம் அதிகாரம் 15-.20 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றது.

இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா வைக் கொண்டாடும் நாம் அனைவரும் இன்றைய நாளில் எம் வாழ்வில் நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டு நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்ற உன்னத விசுவாசத்தை நிலை நிறுத்திக் கொள்வது அவசியம்.

எல்.எஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT