கத்தோலிக்க திருச்சபை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தூய ஆவியானவர் பெருவிழாவைக் கொண்டாடுகிறது.
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்று அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி. மிக ஆடம்பரமாக மிக மகிழ்ச்சியோடு பெற்றோர், உறவினர்கள் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் புதுவாழ்வு கிடைத்தது என்பதால்தான்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தூய ஆவியின் பெருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். ஆவியானவர் நமக்கு ஆண்டவர் இயேசுவின் விண்ணக ஏற்புக்குப் பிறகு இறை தந்தையால் தரப்பட்ட கொடை.
தூய ஆவி பிறந்தார் என்பது அல்ல. மாறாக தூய ஆவியானவரின் வருகையால் திருச்சபையானது பிறப்பெடுத்தது என்பதுதான் அதன் மகிமை.
இறை மக்கள் பிறந்தார்கள். ஆவியின் வாழ்வில் திருத்தொண்டர்கள் தொடங்கி, சீடர்கள், ஆதி கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் திருக்கூட்டமானது பெருகியது என்பதைத் தான் அதன் மூலம் நினைவு கூருகின்றோம்.
ஆதியிலே தூய ஆவியானவர் காற்றாக, தீப்பிழம்பாக, புறாவாக, ஏன் தண்ணீராக அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மனித வாழ்வில் ஆவி, காற்று இவை மிக முக்கியம். மூச்சுவிட காற்று, ஆவி இன்றி மனிதனால் வாழ முடியாது. அதுபோன்றே மனிதவாழ்வுக்கு காற்று வடிவில் தேவ ஆவி காட்சி தருகிறார். தீ நாவாக மனித வாழ்வுக்குக் காட்சி தருகிறார்.
மனிதன் பேசவும், போதிக்கவும் நாவு தேவை. இதை ஆவியானவர் வடிவாக காட்சி தருகிறார். மூன்றாவது நெருப்பாகக் காட்சி தருகிறார். நெருப்பானது தண்ணீரைச் சூடாக்கி நீராவியாகி இயக்கும் சக்தி பெறுகிறது. உணவுக்கு சுவை உண்டாக்குகிறது. இதேபோல்தான் மனிதரைச் சுவையுள்ள மனிதராக மாற்றுகிறது.
நான்காவதாகப் புறா வடிவில் காட்சி தருகிறது. இதனால் தூய்மை உண்டாக்கி, இருளைப் போக்கும் ஆவியாகக் காட்சி தருகிறார். ஐந்தாவதாக ஆவியானவர் தண்ணீராக அழைக்கப்படுகிறார். யாரேனும் தாகமாக இருந்தால் ஆன்ம தாகத்தைத் தீர்க்க அருளாளராகவும் நம்மைத் தூய்மை ஆக்குபவராகவும் அவர் உள்ளார்.
ஒரு கொல்லன் பட்டறை தொழிலாளி ஒரு இரும்புக் கம்பியைத் தீச்சூழையில் வைத்துச் சூடேற்றுகிறார். சூடேற்ற, சூடேற்ற அது நெருப்பாக, சிவப்பாக மாறுகிறது. அதனால் கொல்லன் விரும்பும் சாயலை இந்த இரும்பால் உருவாக்கி விடுகிறார்.
இதேபோல்தான் நகைகளை உருவாக்கும் தங்கம் செய்யும் பணியாளரும். ஆனால் சூடேற்றிய இரும்பானது சூடு குறைந்தால் கருப்பாகி, வளைக்க முடியாத நிலைக்கு ஆகிவிடும். இதுபோலத்தான் ஆவியானவரின் செயல்.
நாம் ஆவிக்கு நம்மை அர்ப்பணம் ஆக்கிடும்போது நாம் செயல் வீரர்கள் ஆவோம். உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்யும் ஆற்றல் உண்டு (பிலி. 4:18) என்பது என் விருதுவாக்கு. ஆம் ஆவியானவரின் துணை கொண்டு செயலாக்கம் பெற முடியும்.
நாம் நம் பாவத்திற்காக மகதலா மரியாளைப்போல் மனம் வருந்தி பாவி என்ற உணர்வோடு நம்மைத் தாழ்த்தி இறைவனிடம் வரவேண்டும் (லூக் 7 : 38, 50).
கொர்னேலியுவைப்போல் புனித பவுலைப்போல் செபத்திலும், தபத்திலும் ஈடுபட்டு இடைவிடாது செபிக்க வேண்டும் (தி. ப. 10:44-46).
நமது மனதை கழுகுக் குஞ்சைப்போல் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். உலகம் அதன் இன்பம், பொருள் இவைகளுக்கு அடிமையாகி இருந்தால் ஆவியானவர் நம்மில் செயலாற்ற முடியாது. நாம் தாகத்தோடு இருக்க வேண்டும். தாகம் இருந்தால்தான் தண்ணீர் குடிக்க ஆசை வரும். அதேபோல் பாவமின்றி ஆன்ம தாகம் இருந்தால்தான் ஆவியானவரைப் பெற முடியும் (யோவா 7 : 37).
தேவ வார்த்தையை, விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும். தேவ வார்த்தையைக் கவனமுடன் கேட்க வேண்டும். மூப்பர்கள் குருக்கள் கை வைக்க நாம் ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(தி.ப. 8:1 19:0)
எல். லெஸ்லி ஜொனதன்