Tuesday, May 28, 2024
Home » எதிர்வரும் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி; அரச ஊழியர் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை

எதிர்வரும் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி; அரச ஊழியர் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை

சர்வதேச தாதியர்தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

by gayan
May 14, 2024 7:00 am 0 comment

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் (12) முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை விரைவான அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நான்கு பிரதான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் மத்திய வங்கிச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரச கடன் முகாமைத்துவ சட்டம், அரச நிதிச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்கள் இந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தாதியர் சேவையின் ஸ்தாபகரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு சர்வதேச தாதியர் தினத்தின் கருப்பொருள் ‘நமது தாதியர்கள் – நமது எதிர்காலம், தாதியர் சேவையின் பொருளாதார சக்தி’ என்பதாகும்.

இதேவேளை, இலங்கை தாதியர் பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அது தொடர்பான நினைவுப் பலகை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.

அரச சேவை தாதியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

“தாதியர் சேவையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். எமது வணக்கத்திற்குரிய முருத்தொடுவே ஆனந்த தேரரின் பெருமுயற்சியின் விளைவாக இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இப்பல்கலைக்கழகம் தற்போதுள்ள கட்டடத்தில் ஆரம்பித்து பின்னர் மேம்படுத்தப்படும்.

எமது வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய அங்கமாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. தாதியர் சேவை மட்டுமின்றி, இந்தப் பல்கலைக் கழகத்தில் சர்வதேச மொழிகளையும் கற்பிக்க வேண்டும். ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பான், கொரியன், சீனா உள்ளிட்ட அனைத்து மொழி அறிவும் இங்கு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவைப் பெற்ற பிறகு, தாதியர்கள் வெளிநாடுகளில் சேவைவாய்ப்புகளைப் பெறலாம்.

எவ்வாறாவது அரச ஊழியர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளை வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு சம்பளத்தை அதிகரிப்பது குறித்தும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில்தான் தொடங்கியது.

மேலும் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன சில குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இந்த நிலை எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்நிலையைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்க வேண்டியதாயிற்று. அதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுர்த்தியை விட மூன்று மடங்கு நிவாரணத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். மேலும், பயனாளிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது”.

பிரதமர் தினேஷ் குணவர்தன உரையாற்றுகையில், ” தாதியர் சேவையை முழுச் சமூகமும் மதிக்கிறது. நம் நாட்டில் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த நாள் மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறது. மக்கள் செவிலியர்களை மிகுந்த நம்பிக்கையுடன் அணுகுகிறார்கள். நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த பிறகு தற்பொழுது தாதியர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. எமது வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் கடின உழைப்பு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த உறுதியான தீர்மானத்தின்படி இன்று தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ முடிந்துள்ளது” என்றார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன உரையாற்றுகையில், “ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. பிரதிப் பணிப்பாளர் நாயகம் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதாரத் துறையில் தாதியர் சேவையின் சிறப்பைப் பாராட்டி சீருடைக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கையின் சுகாதார சேவையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். 2024ஆம் ஆண்டு சுகாதார சேவைக்காக 410 பில்லியன் ரூபா அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உரையாற்றுகையில், “தாதியர்கள் அனைவரும் நைட்டிங்கேலின் வழியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று சின்ன சின்ன விடயங்களுக்கு கூட போராடுகிறோம். வெற்றி பெற்றதை பாதுகாப்பதுதான் தற்பொழுது எஞ்சியுள்ளது. கடமைகளை நிறைவேற்றி சம்பளத்தை உயர்த்துவோம். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் உன்னதமான தாதியர் சேவையின் கௌரவத்தை நிலைநாட்டுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். சவால்களுக்கு முகங்கொடுத்து உறுதியுடன் இருந்து ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களினால் இந்த உரிமைகள் கிடைத்துள்ளன. எமக்கு எந்தப் பிரச்சினையையும் கலந்துரையாடக் கூடிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களுடன் நாம் எந்த பிரச்சினையையும் பேச முடியும்” என்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, யதாமினி குணவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ​ெடாக்டர் ஹரித அலுத்கே, சுகாதார அமைச்சு அதிகாரிகள், தாதியர் கல்லூரிகளின் அதிபர்கள், தாதி உத்தியோகத்தர்கள், தாதியர் மாணவர்கள், ஓய்வுபெற்ற தாதியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT