கர்ப்பிணித் தாய்மார், சிரேஷ்ட பிரஜைகள், மற்றும் 05 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு 05 வீத விசேட விலைக் கழிவுடன் அரச மருந்தகங்கள் மூலம் மருந்து வகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஒசுசல மருந்தக விற்பனை வலையமைப்பின் 55 ஆவது கிளையை நேற்று (13) அம்பலாங்கொடையில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டில், பேராசிரியர் சேனக பிபிலே இலங்கையில் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தை நிறுவினார். கடந்த 53 ஆண்டுகளில், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களின் வலைப்பின்னலை நிறுவியுள்ளது.
இலங்கையில் இலவச சுகாதார சேவை குறித்து குறிப்பிடும் போது பேராசிரியர் சேனக பிபிலேவின் பெயர் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்படுகிறது.
அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மக்களுக்காக பெரும் பணியை செய்து வருவகிறது, இந்த மருந்தகம் மூலம் உயர்தர மருந்துகளை நியாயமான விலையில் பொது மக்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இப்பணியை ஆரம்பித்து வைத்த பேராசிரியர் சேனக பிபிலேவின் எணக்கருவுக்கு அமைவாக, கிராமங்ளில் இன்றும் அரச மருந்தகம் இல்லாமை ஒரு குறைவாகும். இந்த குறைபாட்டை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக அரசாங்கம் வரலாற்றில் அதிகூடிய தொகையான 407 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. மருந்துகளுக்காக 180 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் எந்த அரசும் வரவு செலவுத் திட்டத்தை நிர்வகித்து நிதி ஒதுக்கீட்டை அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை.
சுதந்திரம் அடைந்து 77 வருடங்களில் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவையின் முக்கிய பணியை எடுத்துரைப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என்றும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.