முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸடீனின் 80ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழாக் கொண்டாட்டம் “வரலாறாகும் வேதாந்தி” என்ற பாராட்டு நிகழ்வும், அவரின் நினைவாக வெளியிடப்பட்ட விசேட முத்திரை வெளியீடும் அக்கரைப்பற்று கடற்கரை கொக்கோ கார்டன் வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சட்டத்தரணி ஜமால்தீன் சர்ஜூன் தலைமையில் நடைபெற்றது.
1944ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி பிறந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸடீன், இப்பிராந்திய மக்களுக்கும், பிரதேசத்திற்கும் செய்த அளப்பரிய சேவைகளுக்காக, அவரின் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டதோடு, பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகளினால் பொன்னாடை மற்றும் ஞாபக சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
நாட்டிலுள்ள பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரான, எம்.எச். சேகு இஸ்ஸடீனை கௌரவிக்கும் இந்நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அல்- ஹாபீழ் என்.எம். அப்துல்லா, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.ரி. ஹஸன் அலி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர் ஏ.எல். தவம், பிறை எப்.எம். பிரதிப்பணிப்பாளர் பஸீர் அப்துல் கையூம், தென்றல் எப்.எம். உதவிப் பணிப்பாளர் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எம். தாஜ், தினகரன் உதவி ஆசிரியர் ஏ.ஜீ.எம். தெளபீக், எம்.எச். சேகு இஸ்ஸடீனின் பாரியார் ஆசிரியை நாதிரா சேகு இஸ்ஸடீன் மற்றும் கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பொல்லடி, இஸ்லாமிய பைத், கவிதை உள்ளிட்ட கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர் – றிஸ்வான் சாலிஹு)