Friday, July 12, 2024
Home » ஊடகத்துறை ஆற்றலை மேம்படுத்துவது வாசிப்பு

ஊடகத்துறை ஆற்றலை மேம்படுத்துவது வாசிப்பு

by gayan
May 11, 2024 9:20 am 0 comment

ஊடகம் என்பது இன்று உலகையே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. அன்றைய காலத்தில் ஊடகம் என்பது கல்வியறிவு உள்ளவர்களுக்கு மாத்திரமே உரித்தானதாக இருந்தது. அக்காலத்தில் ஊடகங்களை நாடுகின்ற மக்களும் மிகவும் சொற்பமானவர்களாகவே இருந்தனர்.

ஆனால் இன்றைய காலத்தில் நிலைமை அவ்வாறாக இல்லை. மக்களில் பெரும்பாலானோர் ஏதோவொரு வகையில் ஊடகக் கவர்ச்சிக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உலகின் நடப்பு விவகாரங்களை அறிந்து கொள்வதில் இக்காலத்தில் மக்கள் காண்பிக்கின்ற ஆர்வம் மிகவும் அதிகம்.

சாதாரண பாமர மக்களும் கூட உலக நடப்புகளையும், உள்நாட்டு அரசியலையும் மற்றவர்களுடன் விவாதிக்கின்ற அறிவைக் கொண்டிருக்கின்றார்கள். உலகெங்கும் இடம்பெறுகின்ற பரபரப்பான தகவல்களை அவர்கள் உடனுக்குடனே அறிந்து கொள்கின்றார்கள்.

மக்கள் இன்றெல்லாம் கைத்தொலைபேசி ஊடாக ஊடகங்களுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்கள் உலக நடப்புகள் தொடர்பான செய்திகளை மாத்திரம் நோக்குவதில்லை. அதற்கும் அப்பால் பலவிதமான தகவல்களையும் காட்சிகளையும் கைத்தொலைபேசி வழியாக நோக்குகின்றனர். அவற்றில் நல்லவை மாத்திரமன்றி, தீயவையும் அதிகம் உள்ளன. சுருங்கக் கூறுவதாயின் உலக நடப்புகளை மக்களின் உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது ஸ்மாட் தொலைபேசி.

இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் பெரும்பாலானவை ஒழுக்கவிழுமியங்களைத் தாண்டி தறிகெட்டுச் சென்று கொண்டிருந்தாலும், பத்திரிகை ஊடகமென்பது இன்னுமே தனது தனித்துவத்தை இழக்காமல் பயணம் செய்து கொண்டிருப்பது வியப்பானதும், பாராட்டுக்குரியதுமாகும்.

வெகுஜன ஊடகங்களில் பணியாற்றுவதற்கு இன்று இளவயதினர் பலரும் ஆசைப்படுகின்றனர். அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றுவதில் அதிகமானோர் நாட்டம் கொள்கின்றனர். அவர்களில் அனைவரும் ஆற்றலுள்ளவர்கள் என்று கூறுவதற்கில்லை. மொழி ஆற்றல், ஊடக ஞானம் போன்றவற்றைக் கொண்டிருக்காதவர்களும் ஏதோவொரு கவர்ச்சியின்பால் ஈர்க்கப்பட்டு இத்துறைக்குள் பிரவேசிப்பதுதான் வேடிக்ைகயான விடயமாகும்.

ஊடகத்துறை என்றால் என்ன? ஊடகத்துறையில் மொழியின் செல்வாக்கு எத்தகையது? ஊடகங்களில் மக்கள் எதிர்பார்ப்பவை எவை? ஊடகத்துறையில் வழுக்கள் ஆகக் கொள்ளப்படுகின்ற விடயங்கள் எவை? செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் எவை? பிரசுரத்தின் போது தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் எவை? ஆக்கங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? சுயதணிக்கையின் வரம்பு எது?

இவ்வாறாக ஏராளமான முக்கிய வினாக்கள், ஊடகத்துறையில் புதிதாகப் பிரவேசிக்கின்ற ஒருவருக்கு எழுவது அவசியம். இது போன்ற ஏராளமான வினாக்களுக்குரிய தெளிவு ஒருவரிடம் ஏற்பட்டால் மாத்திரமே அவர் தகுதிவாய்ந்த ஊடகவியலாளராக வளர முடியும்.

ஊடகத்துறை தொடர்பான ஞானமும் அனுபவமும் இல்லாவிடினும், அத்துறைக்குள் பிரவேசித்த பின்னராவது கூட அவர்கள் ஊடகத்துறை சார்ந்த விடயங்களைத் தேடிப் பெற்றுக் கொள்வது அவசியம். தங்களால் பதிவிடப்படுகின்ற செய்திகள் மற்றும் ஆக்கங்கள் பொதுமக்களைச் சென்றடைகின்றன என்பதைக் கருத்திற் கொண்டு ஊடகவியலாளர்கள் நெறிதவறாது பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. தகவல்களைத் தவறாகப் பதிவிடுகின்ற போது, அத்தகவல்கள் சமூகத்தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமென்பதை ஊடகவியலாளர்கள் முதலில் புரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

ஊடகங்களில் முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மொழிக்குரிய முக்கியத்துவம் மீது ஆகும். அச்சு ஊடகமாகட்டும் அல்லது இலத்திரனியல் ஊடகமாகட்டும் இலக்கண சுத்தமான மொழி இன்றேல் அந்த ஊடகம் நன்மதிப்பைப் பெறப் போவதில்லை. மொழிச்சுத்தம் இல்லாவிடில் ஊடகங்கள் பரிகாசத்துக்கு உரியவை ஆகி விடலாம்.

எனவே ஊடகங்களில் மொழியை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. செய்திகள் மற்றும் ஆக்கங்களில் மொழியை நாம் பிரயோகிப்பதென்பது ‘எழுதப்பட்ட ஒரு வரையறை’ அல்ல என்பதை ஊடகவியலாளர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தொழில் அனுபவம் காரணமாக படிப்படியாகவே மொழித்திறமையை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் சரியான வழி.

தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை உலகின் இன்றைய முதல்தர ஊடகவியலாளர்களை எடுத்துக் கொள்வோமானால், அவர்களில் பலர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்லர். சிறிய வயதில் இருந்து பத்திரிகைகளை கருத்தூன்றி வாசித்து வந்ததனாலேயே அவர்களெல்லாம் தங்களது மொழித்திறமையை வளர்த்துக் கொண்டனர் என்பதுதான் உண்மை.

இலங்கை, இந்திய தமிழ் ஊடகங்களில் முன்னர் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்களில் பலர் வாசிப்பு ஞானத்தினாலேயே தங்களை வளர்த்துக் கொண்டவர்களாவர். அவர்கள் சிறப்பான ஊடகப் பணியாற்றி, பத்திரிகைத்துறைக்கான செல்நெறியையும் வகுத்துச் சென்றிருக்கின்றனர். அவர்கள் வகுத்துச் சென்ற பாணியையே இன்றைய ஊடகவியலாளர்களும் தொடருகின்றனர்.

ஆகவே தொடர்ச்சியான வாசிப்புத்தான் சிறந்ததொரு ஊடகவியலாளனை உருவாக்குகின்றது என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT