Thursday, December 12, 2024
Home » மேலும் சில சீன வர்த்தகங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

மேலும் சில சீன வர்த்தகங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

by Rizwan Segu Mohideen
May 10, 2024 6:21 pm 0 comment

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவுக்கு உதவியதால், மேலும் சில சீன நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சீன இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாத ஐரோப்பிய தயாரிப்புகளை கொள்வனவு செய்து அவற்றை ரஷ்ய இராணுவ கொள்வனவாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் சீன நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறியதற்காக, மூன்று பிரதான சீன நிறுவனங்களும் ஹொங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமும் கடந்த பெப்ரவரி மாதத்தில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

“ரஷ்யாவிற்கு செயற்கைக்கோள் வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவின் நிறுவனங்கள் வழங்கியுள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்குலகம் செயற்பட்டு வரும் நிலையில், சீனாவின் இரட்டை பயன்பாட்டு பொருட்களை – இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட தயாரிப்புகளை – ரஷ்யாவிற்கு வழங்குவது ஐரோப்பாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக பீஜிங் கூறுகிறது.

“ரஷ்யாவின் போர்ப் பொருளாதாரத்திற்கு சீனா முட்டுக் கொடுப்பதாக” பேர்லினில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம் சாட்டினார்.

“கடந்த ஆண்டு, ரஷ்யா தனக்குத் தேவையான 90 சதவீதமான இலத்திரனியல் பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது. இவை ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் மற்றும் விமானங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் திறன்கள் மற்றும் படங்களை ரஷ்யாவிற்கு வழங்கவும் சீனா செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மொஸ்கோ உக்ரைனில் அதிக மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்த உதவுகின்றன,” என்று ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

அண்மையில் நான்கு ஜேர்மன் பிரஜைகள் சீன இரகசிய சேவைகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டனர்.இதில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர்மட்ட உறுப்பினரால் பணியமர்த்தப்பட்ட ஒரு உதவியாளரும் அடங்குகிறார்.

தீவிர வலதுசாரி அரசியல்வாதியான மாக்சிமிலியன் க்ராவின் உதவியாளரான ஜியான் குவோ ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் கழித்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT