இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளியான பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு, ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இத்தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சாகல ரத்நாயக்க, உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்கியதுடன், இது தொடர்பில் அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறும், அறிக்கையொன்றை கோருமாறும் ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரியவுக்கு பணிப்புரை விடுத்தார்.