Saturday, June 15, 2024
Home » இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் செயற்கை கை, கால்கள் தயாரிப்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் செயற்கை கை, கால்கள் தயாரிப்பு

by Rizwan Segu Mohideen
May 8, 2024 5:42 pm 0 comment

1000 இலங்கை பயனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தின் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் காட்டுகிறது.

செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு 2024 மே 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாம் மே 23 ஆம் திகதி நிறைவடைகிறது.

இந்த முகாம் சுமார் இரண்டு மாதங்களுக்கு கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இரண்டு இடங்களில் நடத்தப்படவுள்ளதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சேவை வழங்கும். இதற்கான சிவிலியன் பயனாளிகள் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் ஆதரவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொரிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாமிற்கு இந்திய அரசாங்கத்தினால் ஆதரவு வழங்கப்படுவதோடு, உடல் ஊனமுற்றவர்களின் உடல் மற்றும் சமூக-பொருளாதார மறுவாழ்வுக்காக இயங்கும் இந்திய அரச சார்பற்ற நிறுவனமான பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி (BMVSS) மூலம் இது முன்னெடுக்கப்படுகிறது. 1975 இல் நிறுவப்பட்ட ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், செயற்கை கால்கள் மற்றும் அது தொடர்புடைய ஏனைய உதவிகளை வழங்குகின்ற உலகின் மிகப்பெரிய மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பாகும்.

செயற்கை கை கால்களை வழங்கும் அடையாள நிகழ்வானது, 4 இராணுவ உறுப்பினர்களுக்கு அதனை வழங்குவதன் மூலம் இடம்பெற்றது.

BMVSS இதற்கு முன்னர் இலங்கையில் நான்கு முகாம்களை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2010 மார்ச் – ஏப்ரலில் வவுனியாவிலும், 2011 செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலும், 2022 பெப்ரவரியில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும், 3100 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாம்களில் பயனடைந்ததோடு, இதில் 2,200 இற்கும் அதிகமானோர் ஜெய்பூர் செயற்கைக் கால்களை பெற்றனர்.

இத்திறப்பு விழாவின் போது கருத்துத் தெரிவித்த உரையில், உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கை மக்களுக்கு இந்தியாவின் ஆழமான மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். மக்களின் வாழ்வில் உறுதியான தாக்கத்தை வழங்குவதற்கான இந்தியா – இலங்கை கூட்டுறவின் தொடர்ச்சியான முயற்சியை செயற்கை கால் பொருத்துதல் முகாம் எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT