திருகோணமலையினுடைய மூதூர் கிழக்கின் கட்டைபறிச்சான் வடக்கிலுள்ள சேனையூர் ஸ்ரீநாகம்மாள் கோயிலில் வருடாந்த வைகாசி பொங்கல் விழா எதிர்வரும் 19ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
அன்றையதினம் காலை 8.00 மணி 52 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீவருணகுல விநாயகர் கோயிலிலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலமாக நாகம்மாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பக்திபூர்வமான கிரியைகளுடன் மடைப்பெட்டி பிரதமகுரு சிவஸ்ரீ அ.அரசரெத்தினத்தால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமாகும். இதன்போது நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால்பழ பூஜை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்க்கும் நிகழ்வு நடைபெறும். இதன் பின்னர் விசேட தீபாராதனையுடன் பூஜை நடைபெறுமென, மேற்படி கோயில் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடியார்களின் நலன் கருதி மூதூரிலிருந்து நாகம்மாள் கோயில்வரை பேருந்து வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் வழமை போன்று கோயிலில் இந்த வருடமும் அன்னதானம் வழங்கப்படுமெனவும், கோயில் பரிபாலான சபையினர் மேலும் தெரிவித்தனர்.
அன்புவழிபுரம் தினகரன் நிருபர்