Home » சுற்றுலா வீசா கட்டணத்தை 50 டொலராகவே பேண அமைச்சரவை தீர்மானம்

சுற்றுலா வீசா கட்டணத்தை 50 டொலராகவே பேண அமைச்சரவை தீர்மானம்

- அனுமதியின்றி நடைமுறைப்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மையில்லை

by Prashahini
May 7, 2024 9:07 am 0 comment

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் வீசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி அதே கட்டணத்தில் தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான வீசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும்.

சுற்றுலாத் துறை நாட்டுக்குள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற வேளையில் அறவிடப்படும் வீசா கட்டணத்தை தொடர்ச்சியாக 50 டொலர்கள் என்ற வரையறைக்குள் பேணுமாறு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது சுற்றுலாத் துறையினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது சுற்றுலாத்துறையின் எதிர்காலத்துக்கு பெரும் பக்கபலமாக அமையுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்படி இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்த பின்னர் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை, பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே வீசா கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், அனுமதியின்றி இதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதென தெரிவித்துள்ளார்.

On Arrival வீசா வசதி தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் 2023 நவம்பர் (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், வீசா கட்டண விவகாரமும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களில் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது விமான நிலையத்தில் On Arrival வீசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் அமைச்சர் டிரான் அலஸ் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் 05 சிறப்பு நிபுணர்களைக் கொண்ட குழு வொன்று சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வீசா வழங்கும் முறைமையை ஆராய்வதற்காக வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புதிய வீசா முறை தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதமின்றி 2023 நவம்பர் 23இல், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வீசா கட்டண விவகாரமும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் ஒரு பகுதியாகும்.

இதுவரை காலமும் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட வீசா முறைமையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 பகுதிகளாக வேறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய 30 நாட்களுக்காக வழங்கப்படும் வீசா இரண்டு முறைக்கு வருகை தரும் வகையில், ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அது தவிர ஒரு வருடம்,ஐந்து வருடம் என பல்வேறு பகுதிகளாக வீசா வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய யோசனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இரு முறை வருகைக்காக 06 மாத காலத்துக்கு வழங்கப்படும் வீசாவுக்கு 75 டொலர் அறவிடப்படுகிறது .

இது தொடர்பிலேயே தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.அதேபோன்று 30 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் வீசாவுக்கு 50 டொலர் மாத்திரம் வழங்கப்படும்.இதற்கான திருத்தமும் சபையில் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீசா விநியோகிக்கும் பொறுப்பு வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் அது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். அந்த வகையில் வலையமைப்பு, முகவர் சேவை மற்றும் பதிவு உள்ளிட்ட விடயங்கள் மாத்திரமே இந்த நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீசா விநியோகிப்பதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, மேற்படி நிறுவனம் தமது யோசனையை முன்வைத்திருந்தது.

2023.09.08 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதுடன். இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் 2023.09.11 ஆம் திகதி குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு 2023 செம்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை வி.எப்.எஸ்.நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து டிசம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையுடன் இரண்டாவது. அமைச்சரவை பத்திரத்தை 2023.12.04 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்தேன். அதற்கு கடந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்துடன் 2023.12.21 இல், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிலையில் அமைச்சரவையினதும்,பாராளுமன்றத்தினதும் அனுமதி இல்லாமல் வீசா கட்டணம் அதிகரிக்கப்பட்டது என்றும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுவது அடிப்படையற்ற கூற்றாகும்.

அந்த வகையில் வீசா கட்டணம் அதிகரிக்கப்பட்டமை மற்றும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமையை தாம், அறியவில்லை என்று அமைச்சர்கள் தெரிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் சேவையை தேசிய நிறுவனம் முன்னெடுத்தபோது குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மாதாந்தம் சுமார் 20 இலட்சம் ரூபாவை செலவிட நேர்ந்தது. எனினும் வி.எப்.எஸ்.நிறுவனத்தின் ஊடாக இந்த சேவையை முன்னெடுக்கும் போது மக்களின் பணத்திலிருந்து ஒரு சதமேனும் செலுத்த வேண்டியதில்லை. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் புதிய நிறுவனத்தின் ஊடாக சேவையைப் பெற்றுக் கொள்ளும் போது, 18.50 டொலர் சேவை கட்டணத்தையே செலுத்த வேண்டும்.

பிற நாடுகளுக்கு இலங்கையர்கள் செல்லும் போது வீசாவுக்காக சேவை கட்டணம் அறவிடப்படுகிறது. வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனம் கடந்த முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது சேவைகளை முன்னெடுத்துள்ளது. இதன்போது வழமைக்கு மாறாக வரிசைகள் நீண்டன.இந்த நிறுவனம் சேவையை முன்னெடுக்கும் போது இணையத்தள வசதிகளை விமான நிலைய தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதுவரை செயற்படுத்தப்பட்ட வழிமுறையையும் இடைநிறுத்தியுள்ளனர்.

முன்னர் இருந்த செயன்முறை,புதிய செயன்முறை ஆகிய இரண்டையும் கட்டம் கட்டமாக செயற்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியும் விமான நிலைய தரப்பினர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.

அந்த வகையில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT