Sunday, June 23, 2024
Home » அதிகரித்துச் செல்லும் புவியின் வெப்பநிலை!

அதிகரித்துச் செல்லும் புவியின் வெப்பநிலை!

by mahesh
May 4, 2024 6:00 am 0 comment

நாட்டில் தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையைப் பற்றி பெரும்பாலான மக்கள் பேசிக்கொள்கின்றார்கள். இலங்கையில் மாத்திரமன்றி, எமது அயல்நாடான இந்தியாவிலும் கூட உச்சஅளவில் உஷ்ணமான காலநிலை தற்போது நிலவிக் கொண்டிருக்கின்றது.

வீடுகளில் இப்போது நிம்மதியாகத் தங்கியிருக்க முடியவில்லை. இரவுபகலாக வியர்த்துக் கொண்டேயிருக்கின்றது. மின்விசிறிக்கு அருகில் இருந்தால் கூட வியர்த்துக் கொட்டிக் கொண்டேயிருக்கின்றது. இன்றைய காலத்தில் இரவில் நமது உறக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால் வெயில் சுட்டெரிக்கின்றது. வெட்டவெளியில் நின்றபடி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் படுகின்ற அவஸ்தைகள் விபரிக்க முடியாதவை. அவர்கள் கொளுத்தும் வெயிலில் வெட்டவெளியில் நின்றபடியே வேலை செய்கின்றனர். அதேசமயம் பலர் வெயிலுக்கு அஞ்சி அன்றாடம் கூலித் தொழிலுக்குப் போவதையே நிறுத்தி விட்டனர்.

இன்றைய வெப்பமான காலநிலையானது அனைவருக்கும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. உஷ்ணம் தொடர்பான வியாதிகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது முதிர்ந்தவர்களுக்கு இன்றைய உஷ்ணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எமது அயல்நாடான இந்தியாவில் அதிகரித்த உஷ்ணம் காரணமாக பலர் உயிரிழந்துமுள்ளனர். உடலில் ஏற்படுகின்ற நீரிழப்பு காரணமாக இவ்வாறான திடீர் மரணங்கள் சம்பவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது வெப்பஅலை வீசிக் கொண்டிருக்கின்றது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். வெப்பஅலை மேலும் அதிகரிக்குமானால் மக்கள் தாங்க முடியாத இன்னல்களை அனுபவிக்க வேண்டியேற்படுமென்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் புவியின் வெப்பமானது படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்வதையே தற்போதைய உஷ்ண காலநிலை உணர்த்துவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். புவியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதனின் தவறான செயற்பாடுகள் காரணமாகவே புவியின் வெப்பம் இவ்வாறு அதிகரித்துக் கொண்டு செல்வதாகக் கூறப்படுகின்றது. புவியின் வெப்ப அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் புவியில் உயிரினங்களின் இருப்பு ஆபத்தாகவே அமையுமென்று சூழலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகளே காரணம் என்பது விஞ்ஞானிகளின் கூற்றாகும். புவியின் வெப்ப அதிகரிப்பு காரணமாக இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 சென்ரி மீட்டர் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என வலியுறுத்துகின்றனர்.

புவியின் வெப்ப அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால் உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது என்றுதான் அர்த்தமாகும். புயல், வெள்ளம், வரட்சி தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்கும் புவியின் வெப்பம்தான் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் உள்ளிட்ட பசுமைவீட்டு வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைகின்றது.

கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருட்களை கட்டுமீறி பயன்படுத்துவதும், காடழிப்பும் இதற்கான காரணங்களாகும்.

புவி வெப்பமடைவதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. காடுகளை அழித்தல், பெட்ரோலியம் போன்ற பொருட்களை எரித்தல், விவசாயம் சார்ந்த நிகழ்வுகள், அனல்மின் நிலையங்கள், வாகனங்களினால் எற்படும் மாசுபாடு, எரிமலை வெடித்தல் போன்றவை புவி வெப்பநிலை உயர்வடைவதற்காக காரணங்களாகும்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று சர்வதேச அமைப்புகள் குரலெழுப்பி வருகின்ற போதிலும், சில நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையென்பது கவலைக்குரியது. உலகின் சில அபிருத்தியடைந்துள்ள நாடுகள் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வெளியிடுவதை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே இந்த விடயத்தில் ஒருமித்த உடன்பாடு எட்டப்படாமலுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் வாழ்கின்ற ஒரேயொரு கோள் பூமி என்பதுதான் அறிவியலாளர்களின் நம்பிக்கையாகும். ஆகவே புவியை எதிர்கால ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது உலகில் வாழும் நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT