IPL 2024 T20 தொடரில் இன்று (04) இரவு7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடம் வகிக்கிறது. கணக்கீடுகளின் படி இந்த இரு அணிகளுக்குமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பெங்களூரு அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. கடந்த 28ஆம் திகதி அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 100 ஓட்டங்கள்விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரது அதிரடியால் அந்த ஆட்டத்தில் 201 ஓட்டங்களை இலக்கை பெங்களூரு அணி 24 பந்துகளை மீதும் வைத்து வெற்றி கண்டது.
அதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் கிரீன் ஆல்ரவுண்டராக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் 20 பந்துகளில் 37 ஓட்டங்கள்சேர்த்த அவர், பந்து வீச்சில் 2 விக்கெட்களை வீழ்த்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
இவர்களுடன் இந்த சீசனில் 500 ஓட்டங்களை வேட்டையாடி உள்ள விராட்கோலியும் துடுப்பாட்டத்தில் பலம் சேர்த்து வருகிறார். ரஜத் பட்டிதாரும் சிறந்த பார்மில் உள்ளார். இதனால் சொந்த மைதானத்தில் குஜராத் அணியை மீண்டும் ஒரு முறை வீழ்த்துவதில் பெங்களூரு அணி கவனம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் பெங்களூரு இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. T20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகி உள்ள முகமது சிராஜ் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். யாஷ் தயாள், கரன் சர்மா, ஸ்வப்னில் சிங் ஆகியோர் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தினால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ் அணியானது தனது கடைசி இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. பேட்டிங்கில் 418 ஓட்டங்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 320 ஓட்டங்கள்சேர்த்துள்ள ஷுப்மன் கில் ஆகியோர் டாப் ஆர்டரில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். நடுவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்டம் வலுவின்றி காணப்படுகிறது. ரித்திமான் சாஹா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ஷாருக்கான் ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.
இதேபோன்று பந்து வீச்சில் ரஷித் கானை தவிர்த்து மற்றவீரர்களிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படுவது இல்லை. மோஹித் சர்மா ஓவருக்கு சராசரியாக 11 ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதும் உமேஷ் யாதவ் 10.5 ஓட்டங்களை வழங்குவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
சந்தீப் வாரியர், நூர் அகமது,சாய் கிஷோர் ஆகியோர் ஒரு சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இவர்களிடம் இருந்து சீரான திறன் வெளிப்படுவது இல்லை. அதேவேளையில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுப்பவர்களாகவும் திகழ்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை குஜராத் அணி வெளிப்படுத்த வேண்டும்.