Sunday, June 23, 2024
Home » பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு

பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு

by mahesh
May 3, 2024 6:00 am 0 comment

ஜனநாயக நாடொன்றில் கட்சி அரசியல் என்பது தனித்துவமதான அம்சங்களில் ஒன்றாகும். நாடு என்று வரும் போது கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் முக்கியமான விடயமாகும். நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்ட ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பும் கடமையும் அதுவாகவே இருக்கும்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டார். அந்தச் சூழலில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத நிலைமை ஏற்பட்டிருந்தது. சில அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் நலன்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்களை மேற்கொண்டனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செயற்படவில்லை. அவர் இந்நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள பிரதான கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை மேற்கொண்டார்.

குறிப்பாக கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி இருந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார். அதன் பிரதிபலனாக நாடு குறுகிய காலப்பகுதியில் நம்பிக்கை தரும் வகையில் பொருளாதார முன்னேற்றப் பாதையில் பிரவேசிக்க ஆரம்பித்தது.

இதன் பயனாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்களும் பாதிப்புக்களும் குறுகிய காலம் முதல் நீங்கத் தொடங்கின. இதன் விளைவாக நாடு ஒரு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்ததா என வினவும் அளவுக்கு நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கை முகம்கொடுத்தது போன்ற பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த எந்தவொரு நாடும் இலங்கை போன்று மிகவும் குறுகிய காலப்பகுதியில் மீட்சி பெறவில்லை. இது உலகறிந்த உண்மை. பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான சில நாடுகளுக்கு மீட்சி பெற 10-15 வருடங்கள் கூட எடுத்துள்ளன. இந்தப் பின்னணியில் உலகின் பல தலைவர்களும் ஜனாதிபதியின் தலைமையை பாராட்டியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. அதன் ஊடாக நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்களில் இருந்து முழுமையாக மீட்சி பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தப் பின்புலத்தில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தின விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது, ‘நாட்டின் பொருளாதார ஸ்திரத்தைப் பாதுகாக்க உடன்படிக்கை செய்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக அறிவித்தார்.

உண்மையில் காலத்திற்கு அவசியமான அழைப்பு இது. கட்சி ரீதியாகப் பிரிந்து நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியாது. நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி மீட்சி பெற்று இருக்கிறது. அந்த வீழ்ச்சியின் தாக்கங்களும் அழுத்தங்களும் இன்னும் நிலவவே செய்கிறது. இது கட்சி ரீதியாகப் பிரிந்து செயற்படக்கூடிய காலமல்ல. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியம். அதுவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் ஸ்திர நிலைக்கும் இன்றியமையாததாகும்.

இந்தப் பின்புலத்தில்தான் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்து இருக்கிறார். நாடு பொருளாதார ரீதியில் பலமாகவும் வலுவாகவும் இருக்கும் போது கட்சி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பது பிரச்சினையாக இராது. ஆனால் தற்போதைய நிலை கட்சி அரசியலை விடவும் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியதாகும். அதனையே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்தி நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT