Thursday, December 12, 2024
Home » IPL 2024 CSK vs PK :சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

IPL 2024 CSK vs PK :சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

- பஞ்சாப் கிங்ஸின் அதிரடி சிஎஸ்கேவிடம் எடுபடுமா?

by Prashahini
May 1, 2024 6:03 pm 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (01) 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.லக்னோவிடம் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த சிஎஸ்கே கடைசியாக சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் 98 ஓட்டங்களும், டேரில் மிட்செல் 52 ஓட்டங்களும், ஷிவம் துபே 39 ஓட்டங்களும் விளாசி அசத்தினர். அதேவேளையில் பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.

அதிரடி பேட்டிங் அணுகுமுறையை கையாண்டு வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 213 ஓட்டங்கள் இலக்கை துரத்திய நிலையில் வெறும் 134 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு இருந்த போதிலும் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கடந்த ஆட்டத்தில் (லக்னோவுக்கு எதிரான ஆட்டம்) கிடைக்கப்பெற்ற பாடத்தின் வாயிலாக அற்புதமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். அதிலும் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களை முழுமையாக வீசி 22 ஓட்டங்களைமட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

சேப்பாக்கத்தில் கடந்த இரு ஆட்டங்களில் முறையே 108 மற்றும் 98 ஓட்டங்கள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். டேரில் மிட்செல்லும் ஓட்டங்கள்குவிக்க தொடங்கி உள்ளது. அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தி உள்ளது. 172.41 ஸ்டிரைக் ரேட்டுடன் 350 ஓட்டங்கள் குவித்துள்ள ஷிவம் துபே, பஞ்சாப் அணியின் பந்து வீச்சு வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரன் வேட்டையாடும் துபே தற்போது வேகப்பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொண்டு ஓட்டங்கள் சேர்க்க தொடங்கி இருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. தொடக்க பேட்டிங்கில் ரஹானே மட்டுமே தடுமாறி வருகிறார். அவர், தனது கடைசி 4 ஆட்டங்களில் முறையே 5, 36, 1, 9, ஓட்டங்களே சேர்த்துள்ளார்.

அனுபவம்வாய்ந்த அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு திறன் வெளிப்படவில்லை. எனினும் அவர், மீது அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இதனால் ரஹானே பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியானது 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்திருந்தது. அதுவும் 8 பந்துகளை மீதும் வைத்து வெற்றி கண்டிருந்தது.

அந்த ஆட்டத்தில் 48 பந்துகளில் 108 ஓட்டங்களை விளாசி ஜானி பேர்ஸ்டோ அசத்தியிருந்தார். தொடக்க வீரரான பிரப்சிம்ரன் 20 பந்துகளில் 54 ஓட்டங்களையும், நடுவரிசையில் ஷசாங்க் சிங் 28 பந்துகளில் 68 ஓட்டங்களை வேட்டையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

எனினும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அதிகளவிலான பனிப்பொழிவு இல்லாத தருணங்களில் பெரிய அளவிலான இலக்கை துரத்துவது என்பது சற்று சிரமமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹைதராபாத் அணியானது சேப்பாக்கத்தில் கடந்த ஆட்டத்தில் 213 ஓட்டங்கள் இலக்கை துரத்தி78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இதனால் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பஞ்சாப் அணியின் பந்து வீச்சு வலுவில்லாமல் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த காகிசோ ரபாடா, ஹர்சால் படேல், அர்ஷ்தீப் சிங், சேம் கரண் ஆகியோர் இதுரை ஒருங்கிணைந்த செயல் திறனைவெளிப்படுத்தவில்லை. சுழற்பந்து வீச்சில் கூட்டாக 7 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ள ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் முன்னேற்றம் காண்பது அவசியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT