ஜனாதிபதி, நீதி அமைச்சர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு
குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை மீட்க அரசாங்கம் சட்டமொன்றை கொண்டு வரவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய 2024ஆம் ஆண்டாகும் போது சொத்துக்களை அறவீடு செய்தல் தொடர்பான முழுமையான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய குற்றச்செயல்களால் ஈட்டிய சொத்துகள் தொடர்பான சட்டத்துக்கு தேவையான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடவடிக்கை முறைகளை தயாரிப்பதற்காக 2023 மார்ச் மாதம் நீதித் துறையின் நிபுணர்களுடனான குழுவொன்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்டது. இக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் குற்றச்செயல்களால் ஈட்டிய சொத்துகள் தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த இந்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உத்தேச சட்டம் தொடர்பில் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நேற்று கண்டியில் கருத்து தெரிவித்த போது,
“இலஞ்சம், ஊழல், மோசடியூடாக பெறப்பட்ட சொத்துக்கள் எவரிடமேனும் இருப்பின் அதனை அரசுடமையாக்குவதற்கு ஏதுவாக அல்லது பறிமுதல் செய்ய தேவையான சட்டங்களை கொண்டு வருவதற்கான யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்தார்.
இதற்கு நேற்று முன்தினம் (25) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டியில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 25 ஆண்டுகளாக கொண்டு வரப்படாத பல மசோதாக்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் கூறினார். அமைச்சரவையில் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் பின்னர் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.