Home » கடவுச்சீட்டு பெற சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

கடவுச்சீட்டு பெற சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

- குழந்தை அணிந்த நகை, ஸ்கூட்டர் கொள்ளை

by Rizwan Segu Mohideen
April 27, 2024 3:27 pm 0 comment

– பல்வேறு இடங்களில் களவாடிய பொருட்களும் மீட்பு

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), திசரட்ட (3419) பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ்விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிதம்பரபுரம், மதவுவைத்தகுளம், சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35, 34 வயதுகளுடைய 3 இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபகரிக்கப்பட்ட மூன்றரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பறித்துச் செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுதவிர இரண்டு பென்ரன் மற்றும் மடிகணனி என்பனவும் குறித்த மூவரிடம் மீட்கப்பட்டுள்ளது. இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT