மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி இன்று (25) தாய்லாந்து மகளிர் அணியுடன் ஆடவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பமாகும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதோடு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளே மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.
இந்தத் தகுதிகாண் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தலா ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்றில் ஆடும். தொடர்ந்து இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இலங்கை மகளிர் அணி ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் தாய்லாந்துடன் ஸ்கொட்லாந்து, உகண்டா மற்றும் அமெரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன. பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், வனுவாட்டு மற்றும் சிம்பாப்வே அணிகள் உள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடருக்காக இலங்கை அணி நேற்று முன்தினம் (23) ஆடிய இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் இலகு வெற்றி பெற்றது. வனுவாட்டு அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வனுவாட்டு அணியை 17 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு சுருட்ட இலங்கை மகளிரால் முடிந்தது.
இதன்போது வனுவாட்டு அணியின் ஒரு வீராங்கனை மாத்திரம் 12 ஓட்டங்களுடன் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றிருந்தார். 15 வயது சுழற்பந்து வீராங்கனை ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரிய மற்றும் இனோகா ரணவீர தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 8.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கான 59 ஓட்டங்களை பெற்றது. ஹசினி பெரேரா ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை பெற்றார்.
முன்னதாக நெதர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியிலும் இலங்கை மகளிர் அணி இலகு வெற்றியீட்டியது.
இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளில் பலம் கொண்ட அணியாகவே சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி களமிறங்கியுள்ளது. எனினும் மகளிர் கிரிக்கெட்டில் தாய்லாந்து அணி உலகத் தரவரிசையில் 12 ஆவது இடத்தில் இருப்பதோடு ஒரு டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணியையும் தோற்கடித்துள்ளது.
இந்நிலையில் அபூதாபியில் நடைபெறும் இன்றைய ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30க்கு ஆரம்பமாகும்.
மகளிர் உலகக் கிண்ண டி20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.