Thursday, May 23, 2024
Home » வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தகநாள் நேற்று அனுஷ்டிப்பு

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தகநாள் நேற்று அனுஷ்டிப்பு

by Gayan Abeykoon
April 24, 2024 7:12 am 0 comment

சர்வதேச புத்தக நாளை கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் (Catalonia) உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச புத்தக நாள் (World Book Day ) என்பது வாசிப்பு, பதிப்பு, எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான தினமாகும். துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்றார் மார்ட்டின் லூதர்கிங்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன. இதனாலேயே உலகப் புகழ்பெற்ற  ‘டான் குவிக்சாட்’ நாவலை எழுதிய எழுத்தாளர் ‘மிகுவேல் டி செர்வண்டேஸ் ‘ அவர்களின் நினைவு தினம் உலகப் புத்தக தினமாக, ஏப்ரல் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் இந்நாள் விளாதிமீர் நொபோகோவ்ம் மொரிஸ் டிரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் அமைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் உலக புத்தக நாளில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று இத்தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றது.

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்றார்  பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம்.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

உலகில் பாரிய அளவில் நூல்களை வெளியிடும் ரஷ்ய நாட்டுப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கின்றனர்.

நூல்களை அறிவுத் திறனுக்கு ஆற்றுகைப்படுத்தும் களஞ்சியமே நூலகமாகும்.

–ஐங்கரன் விக்கினேஸ்வரா…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT