மறைந்துள்ள குற்றவாளிகள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்போர் மற்றும் வேட்டையாடுபவர்களை தேடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த ஐந்து நாட்களாக யால வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது யால வனப்பகுதியில் மறைந்திருந்த 03 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களை விசாரணைகளுக்காக அத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புத்தல, சியம்பலாண்டுவ மற்றும் பசறை முகாம்களின் படைவீரர்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகளுக்காக அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் விசேட பயிற்சிகளை பெற்ற படையின் சிரேஷ்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது யால வனப்பகுதியில் இரகசியமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆறு ஏக்கர் கஞ்சா செய்கையையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கஞ்சா செடிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகள் மற்றும் 30,450 கிலோ உலர் கஞ்சா ஆகியவையும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.