தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு இன்று (23) அதிகாலை நீந்தி வந்த நீச்சல் வீரர் நடுக்கடலில் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர் நீந்திய நிலையில் இன்று அதிகாலையில் ஒருவர்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதால் அவரது உடல் இராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும பொலிஸ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நீச்சல் வீரர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நீந்தி வருவதை ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடாக மாநிலம் பெங்களுர் மாவட்டம் பகுதியை சேர்ந்த 78 வயதான கோபால்ராவ் தலைமையில் 13 பேர் 22 ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இராமேஸ்வரம் வருகை தந்தனர்.
இதனைதொடர்ந்து, 31 பேர் கொண்ட குழுவினர் இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து 22 ஆம் திகதி படகில் தலை மன்னார் சென்றனர்.
இன்று (23) அதிகாலை 12.10 மணிக்கு 13 பேர் கடலில் குதித்து நீந்த தொடங்கிய நிலையில் 2 மணி நேரம் வரை நீந்திய நிலையில் திடிரென கோபால் ராவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை மீட்டு பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து, நீந்தி வருவதை இரத்து செய்து விட்டு உயிரிழந்தவர் உடல் தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்த இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது