Thursday, July 25, 2024
Home » நினைத்தது நிறைவேறும் சித்ரா பெளர்ணமி

நினைத்தது நிறைவேறும் சித்ரா பெளர்ணமி

by damith
April 22, 2024 6:00 am 0 comment

பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியை விட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.

சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

இத் தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களிலும் பால் குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?

சித்ரா பௌர்ணமி ஒரு தனிநபரின் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் பதிவு செய்யப்படுகின்றன மற்றும் அதற்கேற்ப வெகுமதி அளிக்கப்படும் என்று வலியுறுத்துகிறது.

பூமியில் வாழும் போது நமது செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் அவை மரணத்திற்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சித்ரா பௌர்ணமி என்பது சடங்குகள் மற்றும் பூஜைகள் மூலம் பாவங்களை போக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?

சித்ரா பௌர்ணமியன்று வீட்டைச் சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கலைப் படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

மேலும், அன்றைய தினம் வைக்கும் குழம்பில், தட்டைப்பயறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயசம் வைத்து. பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும்.

பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பௌர்ணமிதான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.

தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்குப் பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து சிவாலயங்களில் கிரிவலம் வர நாம் பாவவினைகளை போக்கி புண்ணியம் தேடிக்கொள்ள முடியும்.

சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும், மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப் பிரச்னைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.

எனவே இந்தப் புனித தினமான சித்திரா பௌர்ணமியில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் மறைந்த தாயாரையும் எல்லாம் வல்ல தாயாக விளங்கும் பராசக்தியையும் வழிபட்டு அருளும் ஆசியும் பெற்று வாழ்வோமாக.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT