Wednesday, October 9, 2024
Home » நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ முடியாது

நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ முடியாது

- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம்

by Prashahini
April 21, 2024 7:55 pm 0 comment

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.

பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெறத் தகுதி பெற்றுள்ளன. ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக இன்று 25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கைகளால் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று இந்நாட்டு மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் புத்தாண்டை கொண்டாடுவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் நாடு இருந்தது. கடந்த காலங்களில் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை வழங்க முடியாமல் மிகவும் கடினமான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

நான் 2022 தமிழ், சிங்கள புத்தாண்டை கம்புருகமுவ பிரதேசத்தில் கழித்தேன். அங்குள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக மக்கள் இரவு வரை காத்திருப்பதைக் கண்டேன். ஆட்சியாளர்களை மக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து இன்று நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை சிலருக்கு நினைத்துக்கூட பார்ப்பது கடினமாக உள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவுகள் மக்கள் விரும்பாத முடிவுகள் என்றே சொல்ல வேண்டும்.

முன்னர் இந்த நாட்டின் அரசாங்கங்கள் ஒரு கட்சிக்கு உரிதானதாகவே இருந்தன. இது தவிர இரண்டு அல்லது மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும். ஆனால் இந்த அரசு அப்படியானதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மட்டுமே இருந்தேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்தனர். அந்த அரசாங்கம் நாட்டின் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சிலர் கூறினர்.

எப்படியிருந்தாலும், நாட்டு நலனுக்கான நோக்கங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதற்காக பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பெரும் சேவை செய்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதால்தான் இன்று இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று, சுற்றுலா வணிகம் எதிர்பாராத வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அந்த பணம் இன்று அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பள உயர்வு மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் கடினமான காலங்களில் கஷ்டப்பட்டோம். இன்று நாடு அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி , தொழிற்துறை வீழ்ச்சி, வேலை இழப்பு போன்ற காரணங்களால் இன்னும் பலர் சிரமத்தில் உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியின் பயனை அனைவரும் பெற வேண்டும். எனவே, அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலனை மூன்று மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் தமிழ், சிங்கள, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த அரிசியை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து வாங்கவில்லை. சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து. இவற்றை வாங்கும் போது சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்போது அந்த சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கட்டியெழுப்புவதில் யாரையும் கடந்து செல்வதற்கோ அல்லது விட்டு விடவோ நாம் தயாரில்லை. எனவே, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று, சுற்றுலாத்துறை மூலம் கிராமங்களுக்கு பணம் கிடைக்கிறது. மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

மேலும், பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் உள்ள 50,000 குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் நாம் அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது. நாம் பிரிந்திருந்தால் இன்று நாட்டில் இந்த முன்னேற்றத்தை காண முடியாது. கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும். அத்துடன், இந்த ஊவா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக சில பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இன்று வழங்கப்படும் இருபது கிலோ அரிசியின் பலன் இந்த மக்களுக்கு மிகவும் பெறுமதியானது. ஆனால் இந்த பலன்களை நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கக்கூடாது. ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டத்தின்படி, மக்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு அதிக காலம் எடுக்காது.

மக்களின் கைகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருகின்றார். அதனை உலகில் யதார்த்தமாக்கி வருகிறார்.

இதன் விளைவாக, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மேலும், மக்களின் சிரமமான வாழ்க்கைச் சூழலிலிருந்து காப்பாற்ற 15,000 ரூபாய் “அஸ்வெசும” மூலம் வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்குத் தேவையான காணிகள் “உறுமய” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வாய்ப்பேச்சிற்கு வழங்கிய வாக்குறுதிகள் அல்ல. கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி விதைத்த யதார்த்தம் இதுதான்.” என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

“பதுளை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அரிசி நிவாரணம் வழங்க ஆரம்பித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருபது கிலோ அரிசி வழங்க ஒருவருக்கு 6000 ரூபா செலவிட வேண்டியுள்ளது. ஆனால், வாழ வழியின்றியுள்ள மக்களுக்கு இந்த சலுகைகளை வழங்குவது பாராட்டுக்குரியது.

நாடு வங்குரோத்தடைந்த போது, நாட்டைக் கைப்பற்றும் தலைவர் எவரும் இருக்கவில்லை. தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது ரணில் விக்ரமசிங்க அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் .

நான் இருபத்தேழு வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் நாட்டை பொருளாதார ரீதியாக விடுவித்த தலைவருக்கு எனது ஆதரவை தெரிவிக்கவே ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டேன். இனிமேல் மக்கள் கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வர மாட்டார்கள். எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கின்றோம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த நாட்டை மக்கள் உங்களிடம் ஒப்படைப்பது உறுதியானது.” என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்,

“இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதியின் பணி பாராட்டத்தக்கது. வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது. அவருக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்புகளின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வரவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் முடிந்தது.

மேலும், 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும பலன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அரச சேவையின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். பதுளை மாவட்டத்தில் இருந்து ஜனாதிபதியின் வெற்றி நிச்சயம் என்றே கூற வேண்டும்.” என்றார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன் தெனிபிட்டிய மற்றும் ஊவா மாகாண அரசியல் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ்.சமரதுங்க, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன,ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x