இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து விரைவில் ஓய்வு பெறுவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உலக சாதனை வெற்றியை பெற்று தொடரை 1–1 என சமன் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சமரி, ஓய்வு குறித்து குறிப்பிட்டார்.
‘எனது ஓய்வு மிக விரைவில் இடம்பெறும். எனக்கு திகதியை குறிப்பிட முடியாது, ஆனால் மிக விரைவில் இடம்பெறும். இப்போது இளம் வீராங்கனைகள் மீது நான் அவதானம் செலுத்துகிறேன். இளம் அணி ஒன்றை கட்டி எழுப்பியுள்ளேன். இந்த இளம் வீராங்கனைகளை ஒருநாள் உலகக் கிண்ணத்துடன் பார்க்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார்.
34 வயதான சமரி அத்தபத்து கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஆடி வருவதோடு அவரது தலைமையில் இலங்கை மகளிர் அணி முதல் முறை நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடர் வெற்றிகளை பெற்றது.
இந்நிலையில் இலங்கை மகளிர் அணி அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆடவுள்ளது.
‘கடந்த 15 ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்து வருவதோடு ஒரு வீராங்கனையாக சில அடைவுகளையும் பெற்றுள்ளோன். ஆனால் அணித் தலைவியாக இன்னும் சாதிக்க விரும்புகிறேன். எனது அணி இந்த உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறுவதை பார்க்க நான் விரும்புகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.