Tuesday, May 28, 2024
Home » புதியதோர் உலகம் செய்வோம் என்று முழங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்

புதியதோர் உலகம் செய்வோம் என்று முழங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்

புரட்சிக் கவிஞனின் நினைவுதினம் நாளை

by gayan
April 20, 2024 6:00 am 0 comment

கன்று அந்நியரின் ஆதிக்கம், இந்திய நாட்டினையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது! அங்கு இனவெறியும் சாதிவெறியும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. உள்நாட்டின் வளங்களை உருவிக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பாளர்களின் கையே அப்போது மேலோங்கிக் கொண்டிருந்தது!

இந்த வேளையில்தான் புதுவையில் பூத்த மலராய்ப் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று புதுமணம் வீசினார் கனக சுப்புரத்தினம் அவர்கள்.

தன் இளம் பராயத்தில் இவர், புதுவையில் இயங்கிய பிரெஞ்சுக்காரரின் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அத்தோடு தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்தங்களையும் முறையாகக் கற்றார். இளங்கலைப் பட்டம் பெற்ற இவர்,1919 இல் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பதவியேற்றார்.

அன்று, புதுவையில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கனகசுப்புரத்தினம் எனும் பாவேந்தருக்குக் கிட்டியது. அவருடன் இணைந்து கொண்டு செயலாற்றினார். பாரதியாருடன் பழகிய போது, அவர் மீது கொண்ட மேலான பற்றினாலும் ஈர்ப்பினாலும் ‘பாரதிதாசன்’ எனத் தன் பெயரை மாற்றினார்.

புதுவையில் பாரதியாருடன் இவரும் சீர்திருத்தக் கவிபாடத் தொடங்கினார். சாதி மறுப்பு, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற விடயங்களில் மக்களுக்குத் தெளிவூட்டினார்.

“புதியதோர் உலகம் செய்வோம்!

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”

“பொதுவுடைமைக் கொள்கை திசை எட்டும் காப்போம்!

புனிதமோடு அதை எங்கள் உயிர் என்றே காப்போம்!”

என்று பாடினார்!

சாதி வேறுபாடற்ற சமத்துவச் சமுதாயம் காண ஆசைப் பட்டார்.

“எல்லார்க்கும் எல்லாம், என்றிருப்பதான இடம் நோக்கி,

நடக்குதிந்த வையம்” என்றெல்லாம் அன்றைய காலத்தின் சமூகத்திற்குப் பொருத்தமான பொதுவுடைமைக் கருத்துக்களை இவர் முன் வைத்தார்.

சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அவ்வேளையில், திராவிட இயக்கத்தின் தீவிரத் தொண்டனாகத் தொழிற்பட்டார், சிறைக்கும் சென்று வந்தார். இவரிடம் அஞ்சாமையும் அநீதியை எதிர்க்கும் நெஞ்சமும் இணைந்தே இருந்தன.

“மானிடம் என்ற வாளும்,

அதை வசமாய் அடக்கிய இருதோளும்,

வானும் வசப்பட வைக்கும்,

நம்பிக்கை வாழ்வைத் திருத்தும்!”

என்று பாடி, எல்லோரும் விடியலின் மீது நம்பிக்கை வைத்துப் போராடத்

ஒற்றுமையை ஊன்றினார்! சாதி வேறுபாடு காட்டாத, சாதிக்கலப்புத் திருமணத்தை வரவேற்றார்

இவரது சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும், இவரின் திறமைகளையும் கண்ட தந்தை பெரியார் ‘புரட்சிக் கவிஞர்’ எனும் பட்டத்தை சூட்டினார். அறிஞர் அண்ணா இவரை 1946 இல் ‘புரட்சிக் கவி’ என்றார். இவர் சட்டமன்ற அங்கத்தவராகவும் ஐந்து வருடங்கள் கடமையாற்றினார்.

‘குயில்’ எனும் சிற்றிதழ் மூலம் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தமிழுடன் ஆங்கிலம் பிரெஞ்சு எனும் மும்மொழிப் புலமை கொண்ட இவர், பிரெஞ்சு மொழியிலிருந்த தொழிற்சட்டங்களைத் தமிழிற் தந்தார்.

மறுமலர்ச்சிக் கருத்துக்களை விதைத்த இவர், இனம் மொழி கூறாத கவிதை வேரில்லா மரம் என்றார்! பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதையிலே கொட்டினார். பெண்களின் உரிமைகள் பற்றிப் பல நூல்கள் படைத்தார்.

உயிரென நினைத்த தமிழிலே, கால வெள்ளத்தால் அழிந்து விடாத சிறப்பான பல படைப்புக்களை மனித குலத்துக்குத் தந்தார்.

அவற்றிலே குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, முல்லைக்காடு, எதிர்பாராத முத்தம், தமிழ் இயக்கம், பாண்டியன் பரிசு, மணிமேகலை வெண்பா, சஞ்சீவ பர்வதத்தின் சாரல் போன்ற இன்னும் பல நூல்களை ஆக்கியுள்ளார்.

இவரது சிறப்பான இலக்கிய ஆற்றலைக் கண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைக்கதை எழுதிடவும் வாய்ப்புக்கள் வழங்கினர்.

இவரது தமிழுக்கும் அமுதென்று பேர், புதியதோர் உலகம் செய்வோம் எனும் பாடல்களும் திரைப்படங்களில் ஒலிக்கின்றன. இவரது, பிசிராந்தையார் எனும் நாடக நூலுக்குச் சாகித்ய அக்கடமி விருது கிடைத்துள்ளது. 1990 இல் தமிழக அரசு இவரது படைப்புக்களை அரசுடைமையாக்கியது.

மேலும் இந்திய அரசு திருச்சியிலே, இவரின் ஞாபகார்த்தமாக பாரதிதாசன் பல்கலைக் கழகம் எனும் பெயரில் மாநிலப் பல்கலைக்கழகமொன்றை நிறுவியுள்ளது!

சென்னை தபாற்துறை இவர் நினைவாக, 2001 இல் தபால்தலை ஒன்றை வெளியிட்டது. தமிழக அரசு ஆண்டு தோறும் இலக்கியவாதிகள் இருவருக்குப் பாரதிதாசன் விருது வழங்குகின்றது!

புரட்சிக் கவிஞராம், பாவேந்தராம் செந்தமிழினைத் தன்னுயிர் என்றவராம் கனகசுப்புரத்தினம் எனும் பாரதிதாசன் அவர்கள்.

காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப் பாடாத கருத்தாழம் மிக்க எளிமையான வரிகள் கொண்ட இவரது படைப்புக்கள், நூலைப் படியெனத் தூண்டிக் கொண்டே இருக்கும் என்றால் மிகையாகாது.

-கிண்ணியா சபீனா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT