பாலித்த தெவரப்பெரும அகால மரணமடைந்த செய்தி முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலித்த தெவரப்பெரும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர். இவை எல்லாவற்றையும் விட மனிதாபிமானம் மிக்க மனிதர்.
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்துகம உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட அணியினர் 17,575 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள். அதன் மூலமே அவர் மத்துகம பிரதேச சபையின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியையும் வகித்தார். பதவிகள் பலவற்றை வகித்தாலும் அவர் எப்போதுமே இனிமையான மனிதராகவே வாழ்ந்தவர். தைரியம் மிக்கவர், நீதிக்காக போராடியவர்.
2016 ஜூலை மாதம் பாடசாலை அனுமதி கிடைக்காத ஒன்பது பிள்ளைகளுக்காக போராடியவர்.
அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் கழுத்தில் கயிறை மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது உயிர் காப்பாற்றப்பட்டது கழுத்தில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னராகும்.
அவரது போராட்டம் வெற்றி பெற்றது, பாடசாலைக் கதவுகள் அம்மாணவர்களுக்காக திறக்கப்பட்டன.
அட்டுலுகம, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கிராமமாகும். 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்றால் முழு நாடுமே பீதியில் உறைந்து போயிருந்தது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே தங்கி இருந்த காலமது. ஆனால் பாலித்த தெவரப்பெரும அதிசயமான ஒரு வேலையை செய்தார். கொவிட் தொற்று விதிமுறைகளை மீறி உணவுப் பொதிகளை எடுத்துச் சென்று அம்மக்களுக்கு விநியோகித்தது உயிரை விட மனிதாபிமானம் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டினார்.
பாலித்த தெவரப்பெரும மரணத்துக்கு முன்னரே மரணத்திற்காக தயாரான மனிதர். அது அவரின் இந்தக் குறிப்பின் மூலம் தெரியவருகின்றது.
“நான் எனது இறுதி யாத்திரைக்கு அனைத்தையும் தயார் செய்துள்ளேன். எங்கள் மத வழக்கப்படி இறப்பதற்கு முன்னரே கிரியைகளை செய்ய முடியும். எனது இறுதி ஊர்வலத்துக்கான பெட்டியையும் தயாரித்துள்ளேன். எனது இறுதி ஊர்வலத்தில் பெட்டியின் பின்னால் யாரும் அழுதுகொண்டு வர வேண்டாம்.”
இவ்வாறு அவர் அந்தக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பாலித்த தெவரப்பெரும என்னும் மனிதர் மரணித்து விட்டார். அவர் மரணம் அடைந்த பின்னர் அவரை நேசித்தவர்கள், அவருக்கு எதிரானவர்கள் அனைவரும் அவரது நற்குணத்தையே பாராட்டுகின்றார்கள். மரணத்தின் பின்னர் நல்ல சொற்களை கேட்பதற்கு நல்லதையே செய்திருக்க வேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!