நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இன்று (18) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார். குறித்த தகவல் வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் அவரது மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வவுனியா விசேட நிருபர்
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333