மருந்து ப்பொருள் மோசடி குறித்து பலர் பேசினாலும், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
வங்குரோத்துற்ற நாட்டில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள், திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும், இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, அரச மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தங்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டும். நாட்டில் நிதி மற்றும் மூலதனப் பற்றாக்குறை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இல்லாத காரணத்தினால் இந்த யோசனை சரியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வருடத்தில் அரசாங்க தரப்பினர் தமது நட்பு வட்டார நண்பர்களுடன் இணைந்து, அரசாங்க-தனியார் ஒப்பந்தங்களை அமுல்படுத்தி, பாரியளவிலான காணி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்த காணி கொள்ளை நடந்து வருகிறது.
இதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, பாரிய அளவில் இடம் கைப்பற்றல் நடந்து வருகிறது, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் யாரும் சிக்க வேண்டாம், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பணத்தை செலவழித்து உலகம் சுற்றி வரும் தலைவர்களும், சேவைகளை முன்னெடுக்க முடியாத வெறும் வாய் பேச்சு தலைவர்களும், யாராவது நல்லது செய்ய முற்படும் போது விமர்சனங்களை முன்னெடுக்கும் தலைவர்களும் தாராளமாக நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடே வங்குரோத்தான இவ்வேளையில் சவாரி செய்யும் தலைவரும், கட்சிக்கு கிடைத்த பணத்தை செலவு செய்யும் தலைவர்களும், பொய்யான சோபன நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்கும் தலைவர்களும் உள்ளனர். நாட்டுக்கு எத்தகையதொரு தலைவர் தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நட்புவட்டார முதலாளித்துவத்தால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு தேவை போலி குடும்பத்துக்கு அஞ்சும் தலைமையா?, வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டின் நிதி வளத்தை பொய்யாக அழிக்கும் சவாரி தலைவர்களா? அல்லது வெறும் வாய்ச் சொல் தலைவர்களா? இல்லை என்றால் அதிகாரம் இல்லாமலும் மக்களுக்காக சேவைகளை முன்னெடுக்கும் தலைவர்களா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், இந்த முடிவு மக்களின் கைகளிலேயே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்பும் தலைமையே தேவை. தற்போதுள்ள வேலைத்திட்டத்தையும், மீண்டு வருவதற்கான தொலைநோக்குப் பார்வையையும் அமுல்படுத்துவதன் மூலம் யதார்த்தமாகவும் உண்மையாகவும் நாட்டுக்காக உழைக்கும் தலைவர்கள் தமது வேலைத்திட்டத்தை நாட்டு மக்களிடம் முன்வைக்க வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால், அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காததால் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறுவது உட்பட பாரியளவில் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தொழில் வல்லுநர்களை நாடு இழந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஏற்படும் பாதிப்பை சொல்லி மாளாது. நாட்டை விட்டு வெளியேறாமல் இந்நாட்டில் இருந்து கொண்டே நாட்டை கட்டியெழுப்பத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.