பதற்றத்தை தணிப்பதற்கான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதும் ஈரானின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாத்தியமான பதில் நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இஸ்ரேலிய போர் அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கூடியபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மையவாத இஸ்ரேலிய அமைச்சரான பென்னி கான்ட், ‘சரியான நேரத்தில் ஈரானுக்கு சரியான விலை கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் உள்ள துணைத் தூதரகத்தின் மீது ஏப்ரல் 1 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகளால் இலக்குகளை அடைவதற்கு முன் அந்த ஆயுதங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களில் தெற்கு இஸ்ரேலில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றில் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் ஏழு வயது இஸ்ரேலிய சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய இஸ்ரேலிய போர் அமைச்சரவை பதில் நடவடிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை பெற்றிருந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அதற்கான காலம் மற்றும் அளவு பற்றி அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதல் ஒன்றில் அமெரிக்கா பங்கேற்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இராணுவ தளபதி மேஜர் ஜெனர் மொஹமது பகெரி விடுத்த எச்சரிக்கையில், ‘ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுத்தால் எமது பதில் தாக்குதல் இன்றைய நடவடிக்கையை விடவும் மிகப் பெரியதாக இருக்கும்’ என்றார். இஸ்ரேலிய பதில் தாக்குதலுக்கு உதவினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்று அவர் அமெரிக்காவையும் எச்சரித்தார்.