Tuesday, May 28, 2024
Home » தமிழர்களுக்குரிய புதிய ஆண்டு பிறப்பதை குறிக்கும் பண்டிகை

தமிழர்களுக்குரிய புதிய ஆண்டு பிறப்பதை குறிக்கும் பண்டிகை

by sachintha
April 13, 2024 5:48 pm 0 comment

 

சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்றும் கூறுவர். அதாவது தமிழர்களுக்குரிய புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழா இதுவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை சித்திரைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் இதனை தமிழ்- சிங்களப் புத்தாண்டு என்றும் குறிப்பிடுவர். ஏனெனில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமான பொதுப்பண்டிகையாக இப்புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 செக்கன்கள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.

சூரியன் மேச இராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 ஆம் திகதி தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 ஆம் திகதிகளில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதேயாகும்.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

தமிழரிடையே சித்திரைப் புத்தாண்டு என்ற பண்டிகை எப்போதிருந்து வழக்கில் இருந்ததென்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் இப்புத்தாண்டு மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகின்றது.

தமிழ் நாட்காட்டியானது இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்கள் தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன.

பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில்தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை’ என்றும், பழமொழி நானூறு ‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்’ என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சித்திரை ஒன்றையே முதன்மையான புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இலங்கை தம்பதெனியா இராச்சிய மன்னனாகவிருந்த பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய ‘சரசோதி மாலை’ எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்ய வேண்டிய சடங்குகள் விபரிக்கப்பட்டுள்ளன.

மேலும், திருக்கோணேஸ்வரம், 1622 ஆம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கேயர் பற்றிய குறிப்புகள் சொல்கின்றன.

சித்திரைப் புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பல ஒற்றுமையான அம்சங்கள் உள்ளன. புத்தாண்டுப் பட்சணங்களிலும் ஒற்றுமை உள்ளது.

புத்தாண்டுக்கு முந்திய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் அந்தப் பாரம்பரியம் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டதென்றே கூற வேண்டும்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT