Saturday, November 2, 2024
Home » தமிழ், சிங்கள இனங்களிடையேயான பாரம்பரிய ஐக்கியத்தின் அடையாளம்
சித்திரை புத்தாண்டு சிறப்பிதழ் குரோதி வருடம்

தமிழ், சிங்கள இனங்களிடையேயான பாரம்பரிய ஐக்கியத்தின் அடையாளம்

by sachintha
April 13, 2024 6:42 am 0 comment

குரோதி வருடம் நாளை பிறக்கின்றது. இலங்கைத் திருநாட்டில் இரு மதத்தினருக்கு மட்டுமன்றி, இரு இனத்தினருக்கும் உரிய ஒரு பண்டிகையாக சிறப்பித்துச் சொல்லப்படும் வகையில் சித்திரைப் புதுவருடம் அமைந்துள்ளது. இந்து தமிழ் மக்களும், பௌத்த சிங்கள மக்களும் பொதுப்பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். வேறுபட்ட மதங்களையும் மொழிகளையும் கொண்டுள்ள மக்கள் இணைந்து பொதுவான பண்டிகையொன்றை பெருவிழாவாகக் கொண்டாடும் பாரம்பரியம் உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இரு மதம், இரு மொழி சார்ந்த வகையில் சித்திரைப் புதுவருடம் இருப்பதால் இலங்கையில் இது ஒரு தேசியப் பொருவிழாவாக முக்கியத்துவம் பெறுகின்றது.

சித்திரைப் புதுவருடப் பிறப்பின் போது தமிழ், சிங்கள மக்கள் வெவ்வேறு பாரம்பரிய சமய அனுட்டான முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள். புதுவருடப் பிறப்பன்று விஷு புண்ணிய காலத்தில் தலைக்கு மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்வது இந்து மக்களது வழக்கம் என்பதுடன் அதுவே புதுவருடத்தில் முதற்கருமமாகவும் அமைகிறது.

புதுவருடம் பிறந்ததும் சுபநேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து ஆசி பெறுவது பௌத்த மக்களது பாரம்பரிய வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன் அதுவே அவர்களது புதுவருடத்தில் ஆரம்பக் கருமமாகவும் இருக்கிறது.

இந்து மக்கள் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, அனைவராலும் தவறாது பின்பற்றப்படவும் வேண்டியதுமாகும்.

புதுவருடம் பிறப்பதற்கு முன்னரும், வருடப் பிறப்புக்கு முன்னருமான விஷு புண்ணிய காலத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்க்கும் வகையில் நின்றவாறு தலைக்கு மருத்துநீர் தேய்த்த பின்னர் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டவாறு தலையிலும் காலின் அடியிலும் குறிப்பிட்ட இலைகளை வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.

ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சித்தர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மூலிகை மருத்துவமுறைகளுடன் தொடர்புள்ளதான இலைகளையும் மற்றும் திரவியங்களையும் சேர்த்து காய்ச்சிப் பெறும் இந்த மருத்துநீரானது மருத்துவக்குணம் கொண்டிருக்கிறது.

எனவே இதனை தலையிலும் உடலிலும் தேய்ப்பதால் தோலிலும் உடலின் உள்ளேயும் இருக்கும் வியாதிகள் நீங்கப் பெறுவதுடன், வாழ்வில் பீடித்துள்ள தோஷங்களும், கர்மவினைகளும் தெய்வீக ரீதியில் அகன்று விமோசனம் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. பொதுவாக ஆலயங்களில்தான் மருத்துநீர் காய்ச்சப்படுவதால் ஒருவகையில் இது தெய்வீகத்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஸ்நானம் செய்த பின்னர், அனைவரும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறான நிறத்திலான புதிய வஸ்திரங்களை அணிந்து, முதலில் வீட்டுப் பூஜை அறையிலும் பின்னர் ஆலயங்களுக்கும் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும்.

தாய் தந்தையர், குரு, பெரியோர்கள் முதலானவர்களை வணங்கி அவர்களது ஆசியைப் பெறுவதும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு பணம் அல்லது பொருட்களை வழங்கி தானதருமங்களைச் செய்வதும், குறிக்கப்பட்ட சுபநேரத்தில் கைவிசேடம் பரிமாறிக் கொள்வதும், உறவினர்கள் நண்பர்களது வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதும், விருந்துபகாரங்களில் கலந்து கொள்வதும், சுபதினம் மற்றும் சுபநேரம் பார்த்து புதுக்கருமங்களை தொடங்குவதும் புதுவருடப் பிறப்பின் பின்னரான சிறப்புப் பாரம்பரியங்களாகும்.

சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது தமிழ், சிங்கள மக்கள் தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். தமிழ் மக்களது கொண்டாட்ட செயற்பாடுகள் கூட இடத்துக்கிடம் மாறுபடுகிறது. அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலும் அந்தந்தப் பிரதேசங்களின் கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நிகழ்வுகளும் கொண்டாட்ட நடைமுறைகளும் வேறுபட்டு இருப்பதையும் காண முடிகிறது.

இந்த வகையில் வடபகுதியில் குறிப்பாக யாழ்குடாநாட்டை நோக்கினால், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, மற்றும் நகரப் பகுதிகளில் சித்திரைப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளும் சம்பிரதாய நடைமுறைகளும் ஒரே மாதிரியானதாகவே அமைந்திருக்கின்றன.

பேராசிரியர் அ. சண்முகதாஸ் தனது கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“சித்திரைப் புதுவருடத்தையொட்டிய தமிழ் மக்களது பாரம்பரிய நடைமுறைகளுள் ஒன்றாக குறிப்பாக யாழ்குடாநாட்டு மக்களிடையே நிலவும் வழக்கமாக போர்த்தேங்காய் அடித்தல் விளையாட்டு பெரும்பாலும் கோயில் வீதிகளில் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புதுவருடப் பிறப்புக்கு பல நாட்களுக்கு முன்பதாகவே போர்த் தேங்காய்களை சேகரிக்கும் முயற்சி தொடங்கி விடும். தேங்காய்களை சிதறடிப்பதற்காக பயன்படுத்தப்படும் காய் ‘கையான்’ என்று சொல்லப்படும்.

இந்த விளையாட்டிலே கைதேர்ந்தவர்களை ‘அடிகாரர்கள்’ என்று சொல்வார்கள். இரு பக்கத்து அடிகாரர்களும் எதிரெதிரே இருந்து கொள்வர். ஒருவர் உருட்டிவிடும் தேய்காயை மற்றவர் தன்னுடைய கையில் வைத்திருக்கும் கையானால் அடித்து நொருக்குவார். இப்போது இந்த விளையாட்டு வெகுவாகக் குறைந்து விட்ட போதிலும், யாழ்குடாநாட்டின் சில கிராமங்களிலும் நடைபெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.” இவ்வாறு பேராசிரியர் சண்முகதாஸ் எழுதியிருக்கிறார்.

யாழ்குடாநாட்டில் இன்னொரு பாரம்பரிய போட்டி நிகழ்வாக கோழிச்சண்டை அமைந்திருக்கிறது. சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டு வந்தன. யாழ்குடாநாட்டு கிராமங்களில் ஏற்கனவே ஒருகாலத்தில் இந்த விளையாட்டு பாரம்பரியம் பெற்றுத் திகழ்ந்தது.

இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சித்திரைப் புதுவருடத்தின் போது கிளித்தட்டு, சடுகுடு, கோலாட்டம் போன்ற விளையாட்டுகளை ஏற்பாடு செய்து நடத்துவதுடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுக்களும் அக்காலத்தில் இடம்பெறுவதுண்டு.

அத்துடன் மாட்டுவண்டிச் சவாரி, துவிச்சக்கரவண்டி ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற விளையாட்டுகளும் புதுவருட சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றன. பழையனவற்றையெல்லாம் மறந்து விட்டு புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்து வரவேற்கப்படும் சித்திரைப் புதுவருடமானது ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வசந்தம் வீசும் வகையில்- நல்ல எதிர்காலத்தை தோற்றுவிப்பதாக அமைய இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!

இலங்கையின் இருஇன மக்களுக்கான முதன்மைப் பண்டிகை சித்திரைப் புத்தாண்டு

சித்திரைப் புத்தாண்டு – 2024 சுபநேரங்கள் – (வாக்கிய பஞ்சாங்கம்)

* புது வருடப் பிறப்பு– 13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.

* விஷூ புண்ணியகாலம் _மருத்து நீர் வைக்கும் நேரம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 முதல் நள்ளிரவு 12.15 வரை

தலை – ஆலிலை, கால் – புங்கை இலை, திசை – வடக்கு

* கைவிஷேடம் பரிமாறும் நேரம்_ -14ஆம் திகதி காலை 07.57 முதல் காலை 09.56 வரை

14ஆம் திகதி காலை 09.59 முதல் நண்பகல் 12.01 வரை

* அணியும் ஆபரணங்கள்_ – நீலக்கல் பதித்த அல்லது வைரக்கல் பதித்த ஆபரணங்கள்.

* அணியும் ஆடைகள்_- கபிலம் அல்லது வெள்ளை நிறம் கொண்டஆடைகள்

* சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் – மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்புசம் (01ஆம், 02ஆம் பாதங்கள்), சித்திரை, விசாகம் (04 ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம்

* வியாபாரம், புதுக் கணக்கு ஆரம்பித்தல்_15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 தொடக்கம் காலை 09.51 வரை. அதே நாள் காலை 09.55 தொடக்கம் காலை 10.31 வரை.

அ. கனகசூரியர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x