ஈரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ‘இரும்புக் கவசமாக’ ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
பத்து நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தும் அச்சுறுத்தல் பற்றி பைடன் எச்சரித்துள்ளார்.
‘இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய எம்மால் ஆன அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த புதனன்று பேசிய ஈரானி உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமனெய், டஸ்கஸில் இஸ்ரேல் நடத்தி தாக்குதல் ஈரான் மீதான தாக்குதலுக்கு சமமாக இருந்தது என்றார்.
‘அவர்கள் எமது துணைத்தூதரக பகுதி மீது தாக்கியபோது, அது எமது நிலத்தை தாக்கியது போன்று இருந்தது’ என்றார். ‘தீய அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு அது தண்டிக்கப்படும்’ என்றும் கூறினார்.
ஈரான் எவ்வாறான பதில் தாக்குதல் ஒன்றை நடத்தும் என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலிய மண்ணில் இராணுவ மற்றும் அரச இலக்குகள் மீது ஈரான் அல்லது அதன் ஆதரவுக் குழு விரைவில் தாக்குதல் ஒன்றை நடத்தும் என்று நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகளை மேற்கோள்காட்டி ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், அதிக துல்லியமான ஏவுகணைகளைக் கொண்டு எதிர்வரும் நாட்களில் சாத்தியமான இந்தத் தாக்குதல் நிகழக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இராணுவ ஒத்திகைக்காக ஈரான் தலைநகர் டெஹ்ரன் வான் பரப்பில் அனைத்து விமானப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மஹ்ர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
டஸ்கஸ் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலான இஸ்ரேல் உஷார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது பாரிய போர் ஒன்றுக்கு தூண்டுதலாக அமைப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனினும் பாரிய போர் ஒன்றுக்கான ஈரானின் இராணுவ திறன் தொடர்பில் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு மாற்றாக ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவு அமைப்புகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அண்டை நாடான லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இஸ்ரேலிய தூதரகங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களாக இருக்காது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தார். இதனால் துணைத்தூதரகங்கள் சாத்தியமான இலக்குகளாகவும் மாறியுள்ளன.
இதில் இஸ்ரேல் சைபர் தாக்குதல் ஒன்றை நடத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் துணைத் தூதரகத்தின் மீது கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் மூத்த இராணுவத் தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்காதபோதும், இதன் பின்னணியில் அது இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அது தொடக்கம் அமெரிக்காவும் பிராந்தியத்தில் உஷார் நிலையை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய பைடன், இந்த பதற்ற நிலை குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.
‘பிரதமர் நெதன்யாகுவிடம் நான் கூறியது போன்று, ஈரான் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களிடம் இருந்து வரும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பாக எமது பொறுப்பு இரும்புக் கவசமாக இருக்கும் என்பதை நான் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்’ என்று பைடன் குறிப்பிட்டார்.
காசா போர் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான முறுகல் அதிகரித்திருக்கும் நிலையிலேயே பைடன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பைடன் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையிலான முறுகல் அதிகரித்தபோதும் இஸ்ரேல் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் அமெரிக்கா கடுமையான பதிலை அளிக்கும் என்ற செய்தியை ஈரானுக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் ஈரானிய வெளியுறவு அமைச்சரை இந்த வாரம் சந்தித்துப் பேசவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன்போது பதற்றத்தை தணிப்பது பற்றி பைடனின் மத்திய கிழக்குக்கான ஆலோசகர் பிரெட் மக்குர்க்கின் செய்தியை ஈரானிடம் தெரிவிக்க இந்த அமைச்சர்கள் முயலவுள்ளனர்.