காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இஸ்ரேலின் வான் தாக்குதலில் தனது மூன்று மகன்கள் கொல்லப்பட்டது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தாக்கம் செலுத்தாது என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.
கொய்ரோவில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்தக் கொலைகளை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சியில் பேசிய ஹனியே, தனது மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் கொல்லப்பட்ட தாக்குதல் ஹமாஸின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
‘இதனால் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று நினைத்தால், அவர்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்திற்கான புதிய முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அந்த அமைப்பு ‘முன்னோக்கி நகர வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு, முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் செல்வதை அதிகரிப்பதற்கும், தெற்கு நகரான ரபா மீது திட்டமிடப்பட்டிருக்கும் படையெடுப்பை கைவிடவும் வலியுறுத்தி வருகிறது.
நெதன்யாகு போரை கையாளும் விதம் தவறாக இருப்பதாக கடந்த செவ்வாயன்று வழங்கிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பைடன் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இஸ்ரேல் காசாவுக்கு போதுமான உதவிகளை அனுமதிப்பதில்லை என்று அவர் கடந்த புதனன்று குற்றம்சாட்டி இருந்தார்.
போர் நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் நேற்றைய (11) தினத்திலும் உக்கிர தாக்குதல் நடத்தியதோடு குறிப்பாக தெற்கில் அது தீவிரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதில் வடக்கு காசாவின் அல் ஷட்டி அகதி முகாமில் வைத்து குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து கடந்த புதனன்று (10) இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலிலேயே கட்டாரைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் தலைவர் ஹனியேவின் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இதில் தாக்குதலுக்கு இலக்கான கார் உருக்குலைந்திருப்பதையும் அதனை பலஸ்தீனர்கள் பார்வையிடுவதையும் காட்டும் புகைப்படங்களை ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘ஹாசிம், ஆமிர் மற்றும் முஹமது ஆகிய எனது மூன்று மகன்கள் மற்றும் சில பேரக் குழந்தைகளும் அவர்கள் சென்ற கார் தாக்கப்பட்டதில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்’ என்று ஹனியே குறிப்பிட்டார்.
இந்த செய்தி கேள்விப்பட்ட விரைவில் அவர் கருத்துத் தெரிவித்தபோது, ‘ஹமாஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை இலக்கு வைப்பதன் மூலம் எமது மக்களின் உறுதியை குலைக்க முடியும் என்று ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) நம்புகின்றனர்’ என்றார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 33,500 ஐ தாண்டியுள்ளது. இதில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நீடித்து வருகிறது.
டோஹாவில் உள்ள ஹமாஸ் பேச்சாளர் ஹொசம் பத்ரான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவை ஹமாஸ் ஆராய்ந்து வருகிறது… இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை’ என்றார்.
இதில் நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக சுமார் 40 பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றுக்கு இந்த முன்மொழிவு பரிந்துரைத்துள்ளது.
கடந்த புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய பைடன், ‘தற்போது ஹமாஸின் கைகளிலேயே உள்ளது.மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவை கொண்டு ஹமாஸ் முன்னோக்கி நகர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் போரை கையாளும் விதம் மற்றும் அது காசாவுக்கான உதவிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சர்வதேச அளவில் விமர்சனம் வலுத்து வருகிறது.
காசாவில் இஸ்ரேலின் சமமற்ற பதில் நடவடிக்கை மத்திய கிழக்கின் சீர்குலைவு மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரித்துள்ளார்.
பரந்த அளவிலான அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பப் புள்ளி ஒன்றாக குறுகிய எதிர்காலத்தில் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பது குறித்து உறுதி அளித்திருக்கும் பல மேற்கத்திய நாடுகளில் ஆஸ்திரியா, அயர்லாந்துடன் ஸ்பெயினும் உள்ளது.