மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான இலங்கைக் குழாத்தில் 15 வயதான இடது கை சுழற்பந்து வீராங்கனை ஷஷினி கிம்ஹானி அழைக்கப்பட்டுள்ளார்.
டி20 மகளிர் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தொடக்கம் மே 7 ஆம் திகதி வரை அபூதாபியில் நடைபெறவுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இலங்கைக் குழாத்திற்கு சமரி அத்தபத்து அணித் தலைவியாக செயற்படவுள்ளார்.
இதில் அண்மையில் நடந்த இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட முக்கோணத் தொடரில் சோபித்ததை அடுத்தே ஷஷினி சர்வதேச போட்டியில் ஆட அழைக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அவர் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. தற்போது தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி அங்கிருந்து நேரடியாக அபூதாபி சென்றடையவுள்ளது.
இதில் தாய்லாந்து, ஸ்கொட்லாந்து, உகண்டா மற்றும் அமெரிக்கா உள்ள குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை இந்த ஆண்டு பிற்பகுதியில் பங்களாதேஷில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற இந்தக் குழுவில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்: சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, காவியா காவிந்தி, இனோஷி பெர்னாண்டோ, சுகன்திகா குமாரி, ஷஷினி கிம்ஹானி.