Tuesday, May 28, 2024
Home » ஆயுளை அதிகரித்துக் கொள்ள…

ஆயுளை அதிகரித்துக் கொள்ள…

by sachintha
April 12, 2024 10:35 am 0 comment

நம்மில் சிலர் உறவினர்கள் விஷயத்தில் பாரபட்சமாகவும், பாராமுகமாகவும் இருப்பதை காண்கிறோம். உறவிலேயே பணக்காரர் என்றால் அவர்களுக்கென்று தனி மரியாதை, ஏழை என்றால் கண்டும் காணதது போல் விட்டுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் உறவுகளைப் பேணுவதின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அல் குர்ஆனும், நபிமொழிகளும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளன.

அந்த வகையில் அல்லாஹ்தஆலா, ‘மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.’ (4:1)

இவ்வசனத்தின் ஊடாக இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்களை புரியக்கூடிய அடியார்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

சுவனத்திற்குச் செல்லக்கூடிய அவர்கள் தங்களுடைய உறவினர்களுடன் அன்பு செலுத்த வேண்டும் சகோதரத்துவம் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுடன் உறவைப் பேண வேண்டும், அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை இவ்வசனத்தின் ஊடாக அவன் வலியுறுத்துகிறான். ‘நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்த தனது அடியார்களுக்கு இதையே அல்லாஹ் நற்செய்தியாகக் கூறுகிறான்.

‘உறவின் அடிப்படையில் ஏற்படும் அன்பைத் தவிர இதற்காக(வேறு) கூலியை நான் உங்களிடம் கேட்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! நன்மை செய்வோருக்கு அதில் நன்மையை அதிகரிப்போம். அல்லாஹ் மன்னிப்பவன். நன்றி செலுத்துபவன்.’ ஸுரா அஷ்ஷுரா(42:23)

ஏழை, எளிய உறவினர்கள் தங்களுடைய அவசியமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் வாய் திறந்து கேட்பதற்குக் கூச்சமுடையவர்களாக இருக்கலாம். நாம்தான் அவர்களுடைய நிலையைக் கவனித்து நம்முடைய தேவைக்கு அதிகமாக உள்ள செல்வத்தைக் கொண்டு உதவுவது நம்முடைய முக்கியமான கடமையாகும்.

‘உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர். (30:38) என்றும் அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் நபி (ஸல்) அவர்கள், ‘ஆதமின் மகனே! (உன்னுடைய தேவைக்கு) மேலதிகமானதை நீர் செலவிடுவதே உமக்குச் சிறந்ததாகும். அதனைச் செலவிடாமல் தடுத்து வைத்திருப்பது உமக்குக் கெடுதியாகும். தேவைக்கெனத் தடுத்து வைத்திருப்பதற்காக நீர் சபிக்கப்பட மாட்டீர். எனவே (செலவிடும்போது) சுற்றத்தினரைக் கொண்டு ஆரம்பம் செய்வீராக! உயர்ந்து நிற்கும் கரமே தாழ்ந்திருக்கும் கரத்தினை விடச் சிறந்ததாகும்.’

(ஆதாரம்: முஸ்லிம்)

எனவே, நம்முடைய தேவைக்காக தடுத்து வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், தேவைக்கு மேலதிகமாக உள்ள செல்வத்தை தர்மம் செய்வது மிகவும் சிறந்தது. நம்முடைய மறுமை வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவும். அப்படி தர்மம் செய்யும்போது நம்முடைய உறவினர்களுடைய தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ஏழைக்குச் செய்யும் தர்மம் ஒன்று மட்டுமேயாகும். ஆனால், அது உறவினருக்குச் செய்யப்பட்டால், தர்மமும் உறவினரை ஆதரித்தல் ஆகிய இரண்டு (நன்மைகள் செய்தது) ஆகும் என்றுள்ளார்கள்.

(ஆதாரம்: திர்மிதீ)

இந்நபிமொழி படி, உறவினருக்கு பொருளாதார உதவிகள் செய்வது தர்மத்தின் நன்மையை மட்டுமின்றி, உறவினரை ஆதரித்ததற்கான கூலியையும் பெற்றுக்கொடுக்கும். ஆனால் வறுமையில் வாடியவர்கள் புதுப் பணக்காரராக மாறியவுடன் உறவுகளையும் மறந்துவிடுகின்றனர். ஒரு பணக்காரன் உறவில்லாத மற்ற பணக்காரர்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர். விருந்துகளில் கூட நெருங்கிய ஏழை உறவினர்களை, ஏழை என்ற ஒரே காரணத்திற்காக கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்! அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் உறவினரைச் சேர்த்துக் கொள்ளட்டும் (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு, ‘என்னை யார் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் என்னைத் துண்டிக்கிறாரோ, அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்’ என்று குறிப்பிடும் எனவும் நபிகளார் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மற்றொரு நபிமொழியில்,’யார் உறவைத் துண்டிக்கிறாரோ, அவருடன் அல்லாஹ்வும் தன் உறவைத் துண்டித்து விடுவதாக’ கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய உறவை துண்டித்துவிட்டு நாம் இம்மையிலும், மறுமையிலும் என்ன பலனை அடைய முடியும்? இவ்வாறு கண்டிக்கும் இறைவன் உறவைப் பேணுபவர்களுக்கு இவ்வுலகில் சிறந்த சலுகைகளையும் அளிக்கிறான்.

இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்’ என்றுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

எல்லா மனிதர்களும் தனக்கு அதிக செல்வம் கிடைக்க வேண்டும் என்பதையும், தாங்கள் அதிக நாட்கள் வாழவேண்டும் என்பதையும் விரும்புவர். அப்படி விரும்பக்கூடியவர்கள், உறவினர்களைப் பேணுவதன் மூலம் செல்வத்தையோ அல்லது அதிக ஆயுளையோ பெறலாம். இது அல்லாஹ்வின் அருட்கொடை, இந்த உலகில் மனிதர்கள் தங்களுடைய இரத்த உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான அன்பளிப்புகள். மறுமையிலும் அவர்கள் அல்லாஹ்விடம் நிறைய வெகுமதிகளை இன்ஷா அல்லாஹ் பெறமுடியும்.

அபூ முஷீரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT