Sunday, May 26, 2024
Home » தமிழகம் இழந்துள்ள சிறந்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எம்.வி

தமிழகம் இழந்துள்ள சிறந்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எம்.வி

by sachintha
April 12, 2024 10:32 am 0 comment

எம்.ஜி. ஆரின் இதயக்கனி, புரட்சித் தலைவரின் மனசாட்சி என்றெல்லாம் போற்றப்பட்ட அருளாளர் இராம வீரப்பன் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த காலம் அது .

சென்னை எழும்பூர் இம்பிரியல் ஹோட்டலில் நடைபெற்ற கவிதை உறவு ஆண்டுவிழாவில் அதன் அமைப்பாளர் ஏர்வாடியாரின் தொண்டரடிப்பொடியாழ்வாராக இருந்த நான், அருளாளர் திருக்கரங்களால் பாராட்டுப் பெற்ற போது தமிழக அரசே பாராட்டியது போன்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.

அருளாளர் அவர்களுக்கு எப்போதுமே பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. குறிப்பாக சிற்றிதழ்களை படித்துப் பாராட்டுவது அவருடைய சிறந்த பண்பாடு. அந்த வகையில் நம் ‘உரத்த சிந்தனை’ மாத இதழுக்கு வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் வழங்கி ஆதரவு தந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க ஜெ அணி, ஜா அணி எனப் பிரிந்த போது, புரட்சித் தலைவரின் மனைவி ஜானகி அம்மாவை அவரது அடுத்த வாரிசாக அறிமுகப்படுத்தி அரசியலில் அவரை ஈடுபட வைத்ததில் வீரப்பன் அவர்களுக்கு பெரும் பங்குண்டு

தாய் வார இதழின் பதிப்பாளர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக விளங்கய அப்பு என்கிற ரவீந்திரன், ஆசிரியர் வலம்புரி ஜான் உட்பட அனைவரும் ஜானகி அணியின் பின் திரண்டனர்.

அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் கருத்துக் கணிப்பு எல்லாம் கிடையாது

எம்.ஜி.ஆரின் மனைவி என்னும் நன்மதிப்பு, ஆர்.எம்.வி யின் வழிகாட்டல், புதிதாய் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசன் மீது மக்களுக்கு உள்ள மரியாதை, இரட்டை இலைக்கு பதிலாக இரட்டைப் புறா சின்னம்…

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அப்போது எனக்கிருந்த அரசியல் அறிவைக் கொண்டு ‘அடுத்த முதல்வர் ஆர்.எம்.வி’ என்று ஒரு கட்டுரையை எழுதி தாய்க்கு அனுப்ப… அதிரடியாய்

ஆர். எம்.வி அவர்களின் முகத்தை அட்டைப்படத்தில் தாங்கி அந்தக் கட்டுரை பிரசுரமானதும் “ஆஹா! நாம் கூட அரசியல் பத்திரிகையாளர் ஆகலாமோ” என்று மனம் ஆனந்தத்தில் குதித்தது,

அதற்கப்புறம் நடந்ததெல்லாம் உலகத்துக்கே தெரியும்.

உரத்த சிந்தனையின் 24 ஆவது ஆண்டு விழா மலருக்கு வாழ்த்துக் செய்தி வாங்கவும் விழாவுக்கு அவரை அழைக்கவும் அவரை சந்திக்க அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற போது, எழுந்து நின்று அன்புடன் வரவேற்றுப் பேசினார்.

அந்தக் கட்டுரையைப் பற்றிச் சொன்னபோது, அவரது வலக்கையால் என் முதுகில் தட்டி “அந்த வேலை உங்களுடையதா?” என்று சிரித்தபடியே கேட்டு விட்டு எம். ஜி. ஆரின் சில பண்புகளை மகிழ்ச்சி பொங்கக் கூறினார். விடைபெற்ற போது எழுந்து நின்று “கட்டாயம் விழாவுக்கு வருகிறேன்” என்று சொல்லி விடை தந்தார்.

இரண்டு நாட்களுக்குள் வாழ்த்துச் செய்தியை தபாலில் அனுப்பியதோடு “நான் எழுதியிருப்பது போதுமா?” என்றுவேறு தொலைபேசியில் கேட்டதும் “அட… இத்தனை பண்புடையவர் என்பதால்தான் புரட்சித்தலைவரின் இதயக்கனியாய் விளங்கினாரோ?” என்று பாராட்டத் தோன்றியது.

18.02.2007 சென்னை மயிலாப்பூர் தட்சிணாமூர்த்தி அரங்கில் அய்யா அவ்வை நடராசன் தலைமையில் நடைபெற்ற உரத்த சிந்தனையின் 24 ஆவது ஆண்டு விழாவில் மலர் வெளியிட்டு, விருதுகள் வழங்கி, 25 நிமிடங்கள் அரசியல் கலக்காத இலக்கியம் ததும்ப ததும்ப பேசி கைத்தட்டல்களை அள்ளினார் ஆர்.எம்.வி. பின்பு கம்பன் கழகத் தலைவராக தேர்வு பெற்றதற்காக ஒரு முறையும், 90ஆவது பிறந்த நாளின் போதும் அவரை சந்தித்து ஆசி பெற்றேன்.

திரைப்படம், அரசியல், இலக்கியம் என்ற மூன்று துறைகளிலும் ஆளுமையாக விளங்கிய போது ஆர்ப்பரிக்காத எளிமையும் அன்பும் கொண்டதால் அருளாளர் என்ற சொற்றொடர் ஆர். எம். வி அவர்களால் பெருமைப்பட்டது.

தமிழகம் நல்ல தலைவர்களை இழந்து வருவது வேதனைக்குரியது.

எம்.ஜி.ஆர் தன் இதயக்கனியை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT