Sunday, May 26, 2024
Home » மகத்துவமிக்க ஈகைத்திருநாள்

மகத்துவமிக்க ஈகைத்திருநாள்

by Gayan Abeykoon
April 11, 2024 4:24 pm 0 comment

வான் வெளியில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தோற்றமளித்த கணம் முதல் உலகெங்கும் எதிரொலிக்கும் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு செலுத்தும் நன்றி உணர்வின் வெளிப்பாடாக அமைகின்றது.

அல்லாஹுத்தஆலா எங்களுக்கு ஏற்படுத்திய அருட்கொடைகளில் ஒன்றே இரு பெருநாள் தினங்களாகும். அவற்றில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றையது ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இப்பெருநாட்கள் மிக முக்கியமான இரு வணக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. நோன்புப் பெருநாள் தம்மீது கடமையான நோன்புக்குப் பின் கொண்டாடப்படும் ஒரு பெருநாள். ஹஜ் பெருநாள் என்பது ஹஜ் வணக்கத்தை மையமாக வைத்து கொண்டாடப்படும் பெருநாளாகும்.

பெருநாள் பிறை தென்பட்டதும், உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகம் பெருவெள்ளமாகப் பெருகி மகிழ்ச்சி நதி வீதியெங்கும் ஓடும். பசித்திருந்த வயிறுகளில் பால்சுரக்கும். விழித்திருந்த விழிகளில் ஒளி பிறக்கும். ஸக்காத்துல் பித்ர்’ எனும் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்கள் வழங்கத் தொடங்குவர். ரமழான், மாதம் முழுவதும் நோன்பு என்னும் உபவாசத்தை மேற்கொண்டவர்கள் தம் நோன்பை பூரணப்படுத்தும் வகையில் ஸக்காத்துல் பித்ர் எனும் இக்கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும். நோன்பு நோற்ற அனைவர் மீதும் அவர்களின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் உள்ள சிறுவர்கள், குழந்தைகள் மீதும் இவ்வீகை கடமையாகும்.

நமது நாட்டில் நாம் பிரதான உணவாகக் கொள்ளுகின்ற அரிசியில் இருந்து ஒருவருக்கு சமமாக இரண்டரை கிலோ வீதம் இதனை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். நோன்பு நோற்றவர்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்ல முன் இதனை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

முஸ்லிம்கள் ரமழான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் தம்கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

ரமழானின் சிறப்பைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது, இம்மாதம் பூத்துக் குலுங்கும் புண்ணியங்கள் நிறைந்த வளமான மாதம், மக்களுக்கு நேர்வழிகாட்டக்கூடிய திருமறை இறக்கப்பட்ட புனித மாதம், மனித உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஏழை – பணக்காரன், உயர்வு – தாழ்வு, போன்ற வித்தியாசமற்ற பொறுமையின் மாதம் என்றெல்லாம் கூறுகின்றான். ‘நோன்பு எனக்குரியது, நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன்’ என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

புனித ரமழான் எமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆத்மாவுக்கும் சிறந்த பயிற்சிகளை வழங்கியது. அப்பாசறையிலே நாம் பெற்ற பயிற்சி எமது வாழ்நாள் முழுவதும் நீடித்து மணம் பரப்ப வேண்டும்.

குறிப்பாக தம்மீது கடமையான நோன்பு ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீகப் பயிற்சியாக உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இப்பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகுமென அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

ரமழான் நோன்பு கற்றுத்தரும் ஆன்மிக விழுமியங்கள், ஒழுக்கப் பண்பாடுகள், உயர் முன்மாதிரிகள் பெருநாளிலும் அதனைத் தொடர்ந்துவரும் நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்றதும், தொழுகை நடத்துவார்கள். பின்னர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அதன் பிறகு தோழர் பிலால் (ரழி) அழைத்துக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்று தர்மம் செய்வதை வலியுறுத்தி உரை நிகழ்த்துவார்கள். பெண்கள் தர்மம் செய்வார்கள். பின்னர் அனைவரும் இல்லம் திரும்புவார்கள்.

இப்பெருநாள் தினங்களில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டல் உள்ளது. அவ்வழிகாட்டல்கள் படி பெருநாள் தினத்தை அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகும். ஆகவே ரமழானில் நோன்பு நோற்று அரிய பல நன்மைகளைப் பெற்றுக்கொண்டுள்ள நாம் நபிவழியில் ஈகைத்திருநாளைக் கொண்டாடி இறை திருப்தியையும் அருளையும் ஈருலகப்பேறுகளையும் பெற்றிட முயற்சிப்போம். ‘ஈத் முபாரக்’.

றிப்கா அன்ஸார் – அதிபர்

சாய்ந்தமருது

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT