Sunday, May 26, 2024
Home » பேரின்பப் பெருநாள் வாழ்த்து

பேரின்பப் பெருநாள் வாழ்த்து

by Gayan Abeykoon
April 11, 2024 11:28 am 0 comment

தலைப்பிறை கண்டார் அன்பர்

தரணியே அன்பால் பொங்கும்

அலையருள் வீசல் கண்டேன்!

ஆதவன் அல்லாஹ் என்றே

கலைக்குரல் எழுப்பி வானில்

கைகளைக் கூப்பல் கண்டேன்!

விலைமதிப் பில்லா நல்ல

வீரிய விரதம் வாழ்க!

 

பள்ளியின் வாங்கு வானில்

பாடிய செய்தி கேட்டேன்!

அள்ளியே இன்ப வாழ்த்தை

ஆருயிர்த் தோழருக்கு,

கள்ளதில் வண்டு பாடும்

கவியதில் பந்தி வைத்தேன்!

தள்ளியே தாழ்வு போகத்

தளிர்த்தன உலகு எல்லாம்!

 

“நோன்பெனக் குரிய தந்த

நோற்றலின் கூலி நானே”

தானதை உரைத்து வைத்தான்,

தனிப்பெரும் அருளின் மிக்கான்!

தேனவன் செய்திப் பேறு

தெரிந்துமே நோன்பு பூண்டோர்,

வானவர் வாழ்வை மண்ணில்

வாழுதல் திண்ணம் கண்டீர்!

 

ஏகமாம் இறைமேல் அச்சம்

எழுந்திடல் வாழ்வின் அர்த்தம்,

தாகமாய் அதுகைக் கொண்டே,

தன்னிகர் ரமழான் தொட்டு

ஆகமம் ஆகிச் ஷவ்வால்

அதுவரை நோன்பி ருந்தோர்,

பாகமாம் பசியைக் கொன்றார்!

பதியினைப் பசியாய்க் கொண்டார்!

 

நோன்பது கடமை, அதை

நோற்றலும் கடமை, இங்கு

வான்பத மெய்தல் நல்ல

வல்லிறை தருவான் என்றே,

ஊனினை வருத்தி நல்ல

உள்ளொளி பெருக்கி நின்ற

தேனிகர் உறவு கொள்ளும்

தேன்பிறை கண்டோர் வாழ்க!

 

ஏகமாம் இறையின் முன்னே

எதுவுமே நானென் றெண்ண,

மோகமாம் சர்வ வஸ்து

மோசமாய்ப் போகும் காணீர்!

தாகமாய் இறையை ஏற்கும்

தனிப்பெரும் அல்லா உம்மில்

வேகமாய்த் தரித்து நிற்பான்!

வேண்டிய பலவும் செய்வான்!

 

“நீர்செயும் அனைத்தி னிற்கும்

நிலமதில் கூலி அல்ல!”

“நீர்வினை செய்யின் நானோ

தீர்க்கிறேன் மறுமை!” என்றோன்

“ஆர்கலி உலகில் என்றும்

அன்பதால் நோன்பு நோற்றால்,

பாரினில் தன்னைத் தந்தே

பலதுமே செய்வேன்!” என்றான்.

 

மூன்றது பத்து என்றே

முழுமையில் பகுத்தார் நோன்பை,

தானது ரஹ்மத் என்ற

அருளது முதலில் என்றார்,

கானலாய்… பாவம் போக்கும்

கனிவினை மஃபிரத் தென்றார்,

வேனிலாம் இறுதிப் பத்தோ

வெற்றிதான் மீட்சி என்றார்!

 

மும்மையின் இறுதிப் பத்தோ

முழுமையும் உணர்த்தும் ஆறு!

எம்மையுள் எழுக என்றே

இழிநிலை கழுவும் ஆறு!

தம்மையுள் தௌபா செய்து

தானதற் கிரங்கின், அல்லா,

தம்மையே தருவான் என்ற

தனிப்பெரும் வார்த்தை வாழ்க!

 

முப்பது இரவும் தேவ

முழுநினை வோடு எண்ணி

தப்பெதும் நேரா நல்ல

தராவீஹ் என்று சொல்லி

செப்புவர் ரக்ஆத் செம்மை

செவ்விய இறையைப் பார்த்து

இப்புவி உய்யத் தாமும்

இன்பமாய் உய்வ ரன்றோ!

 

ஒப்பரும் புனித குர்ஆன்

ஒளிரும் இந்நோன்பு நாளில்,

செப்பரி ஞான மேலோன்,

செகமெலாம் போற்றும் வல்லோன்,

தப்பெதும் தாங்கா நபியார்

தனிப்பெரு ஹிராத்தாம் குகையுள்,

ஒப்புயர் இருபத் தேழ்நாள்

ஒண்முதல் வசனம் பெற்றார்!

 

வயிற்றினைக் காலி யாக்க

வல்மனம் தூய்மை யாகி

கயிற்றினால் மனதைக் கட்டும்

கல்வியும் தேர்ச்சியாகும்

பயிற்றினால் பயிலா ஞானம்

பார்மிசை இல்லை என்னும்

பயிற்சியும் தேர்ச்சி யாகும்,

பார்மிசை நோன்பி னூற்றால்!

 

என்னரும் பிறையின் நேசர்

என்றுமே நீவீர் வாழ்வீர்!!!

தன்னரும் அருளால் அந்த

தனிப்பெரும் அல்லாஹ் எண்ணும்

பன்னருஞ் செயல்கள் யாவும்

பலித்துமே வாழ்வீர் வாழ்வீர்!!!

கன்னலும் பாலும் தேனும்

கலந்ததென் கவியால் வாழ்வீர்!!!

கலாநிதி செல்லதுரை சுதர்சன்…
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT