ன்பு பெருநாளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தயாராகும் போது பித்ரா (தர்மம்) கொடுப்பதைக் கொண்டே தயாராக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நோன்பு பெருநாள் தர்மம் நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாகவும் ஏழை , எளியவர்கள் பெருநாள் தினத்தில் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கங்களின் அடிப்படையிலும் கடமையாக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் பூராகவும் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர்.
ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப்பிறையுடன் ரமழானுக்கு விடைகொடுத்து விட்டு நோன்புப் பெருநாள் குதூகலத்தில் திளைக்கின்றன.
பெருநாள் தினம் என்பது சிறியோர், பெரியோர், ஏழை, பணக்காரன், முதியவர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடிய தினமாகும். இப்பெருநாள் தினத்தில் அல்லாஹ்வின் உவப்புக்குரிய வழிகளில் பெருநாளைக் கொண்டாட இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
பெருநாள் தினம் அல்லாஹ்வை ஞாபகமூட்டக் கூடிய, அவனைப் புகழக் கூடிய தினமாக இருக்க வேண்டுமே தவிர நற்செயல்களுக்கு மூட்டை கட்டும் தினமாக அமையலாகாது.
ஈதுல் பித்ர் பெருநாளில் அதிகமானளவு நன்மைகளை செய்ய நாம் முன்வர வேண்டும். நாம் மட்டும் பெருநாளைக் கொண்டாட அயல் வீட்டார் பெருநாளைக் கொண்டாட வசதியற்றவனாக இருப்பானேயானால் நாம் கொண்டாடும் பெருநாளில் என்ன தாற்பரியம் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது. பெருநாள் தினத்தில் வீண் கேளிக்கை, விளையாட்டுக்களை தவிர்த்து மற்றைய மதத்தவர்களுடன் புரிந்துணர்வு கருதிய ஒன்றுகூடல்களை நடத்தலாம். இதன் மூலம் இரு சாரார் மத்தியில் நிலவும் தப்பபிப்பிராயங்கள் நீங்கி பிரதேச மற்றும் தேசிய அமைதிக்கு வழியேற்படும்.
வறிய மக்களின் துயர் துடைக்கும் பித்ரா என்ற கடமையுடன் பெருநாள் தொடங்குவதன் காரணமாகவே பித்ர் என்ற வார்த்தையுடன் சேர்ந்து ஈதுல் பித்ர் என்று இப்பெருநாள் அழைக்கப்படுகின்றது. பெருநாள் தினத்தில் வாழ்க்கை வசதிகளையுடைய ஒவ்வொரு முஸ்லிமும் வசதிகள் அற்ற அல்லது வசதிகள் குறைந்த ஏழைகளுக்கு கட்டாயமாகக் கொடுப்பதற்குரிய நன்கொடையே ஸகாதுல் பித்ர் எனப்படும்.
ஒவ்வொரு முஸ்லிமின் செயல்களும் மற்றைய சகோதர முஸ்லிம்களின் சுகதுக்கங்களில் பங்குபற்றக் கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த உண்மையை ஸகாதுல் பித்ர் அமைப்பு முறையிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஈதுல் பித்ர் தொழுகை முடிந்தவுடன் இமாம் நிகழ்த்தும் குத்பா உரையை அனைவரும் கேட்க வேண்டும். தொழுகையை போன்றே குத்பாவும் ஒரு இபாதத் என்பதை மறக்கலாகாது. இவ்வாறு ஒரு இமாமுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் முஸ்லிம் சமுதாய அமைப்பு வலுப்பெறுவதோடு, தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் பலவகையான நன்மைகளையும் அல்லாஹ்வின் அருளையும் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பெருநாள் தினங்களில் உறவினர்கள், நண்பர்கள், மார்க்க ஊழியர்கள் அனைவரையும் கண்டு பேசி உபசரித்து, வாழ்த்துக் கூறி தங்களிடையே பற்றையும் பாசத்தையும் அன்பையும் ஆதரவையும் மென்மேலும் அதிகரித்துக் கொள்வதும் சிறந்த செயலாகும்.
அனைத்து இனங்களும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கு இப்பெருநாளில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.