ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை நேற்று அந்த கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தரப்பினர் பூட்டுப் போட்டு மூடியுள்ளதுடன் அதன் பின்னர் அங்கு சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன தரப்பினர் மேலும் ஒரு பூட்டைப் போட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேன தரப்பின் பதில் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த அங்கு சென்று அந்த பூட்டை பூட்டியுள்ளார்.
அந்த வகையில் இந்த இரண்டு தரப்பினரும் இல்லாமல் கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறக்க முடியாத நிலை காணப்படுகிறது.
பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகம் தொடர்பான நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டநாயக்க குமாரதுங்கவின் தரப்பினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் என பிரிந்து செயற்படும் இரண்டு குழுக்களையும் மருதானை பொலிசார் அழைத்திருந்தனர்.
அந்த வகையில் நேற்றுக் காலை 10.30 மணிக்கு கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் வருமாறு இரண்டு தரப்பினருக்கும் மருதானை பொலிசார் அழைப்பு விடுத்திருந்தனர்.
அந்த அழைப்பை ஏற்றுக் நேற்றுக்காலை 10.00 மணியளவில் மைத்திரிபால சிறிசேன தரப்பில் அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால எம். பி உள்ளிட்ட தரப்பினர் அங்கு வருகை தந்திருந்தனர் எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தரப்பினர் எவரும் அங்கு வருகை தந்திருக்கவில்லை.
அந்த நிலையிலேயே அரை மணித்தியாலங்கள் அங்கு காத்திருந்த சாரதி துஷ்மந்த எம். பி உள்ளிட்ட தரப்பினர் மேலும் ஒரு பூட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்