Home » சந்தேகத்தில் புதையுண்ட நாம் அத்தகைய கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம்

சந்தேகத்தில் புதையுண்ட நாம் அத்தகைய கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம்

by sachintha
April 9, 2024 11:40 am 0 comment

கனவுலகம் ஒன்று அன்று எருசலேமில் உருவாக்கப்பட்டிருந்தது. இயேசுவின் வழியை நம்பினோர் இணைந்து உருவாக்கிய சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஞாயிறு முதல் வாசகம் இவ்வாறு கூறுகிறது:

திருத்தூதர் பணிகள் 4:32-35

அந்நாள்களில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.

தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும். (திருத்தூதர் பணிகள் 4:32-35)

இந்த வாசகம் கத்தோலிக்க உலகின் ஆலயங்கள் அனைத்திலும் இந்த ஞாயிறன்று ஒலித்தது. அதை கேட்கும்போது உள்ளம் மகிழ்வால் நிறைவடைகிறது. அதே நேரம் ‘இப்படிப்பட்ட ஒரு சமுதாயம் இருந்திருக்க முடியுமா?’ என்ற சந்தேகமும் எழுகிறது. மனித உள்ளம் மகிழ்வில் நிறையும்போதும், வேதனையில் வீழும்போதும், சந்தேகங்கள் எழுகின்றன. தங்கள் தலைவரும், போதகருமான இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும், சீடர்களில் ஒருவரான தோமா அதை நம்ப மறுத்ததும், அவரது சந்தேகத்தைத் தீர்க்கும் வண்ணம் இயேசு தோமாவைச் சந்தித்ததும் இன்றைய நற்செய்தியாக (யோவான் 20:19-31) வழங்கப்பட்டுள்ளது.

இயேசு கூறும் அழகியச் சொற்களை இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு கேட்கிறோம்: “காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (யோவான் 20:29)

சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை, ‘இறை இரக்கத்தின்’ ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறை இரக்கம் அல்லது இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேக மேகங்கள் கலைந்துவிடும் என்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்குவது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு. இந்த மறையுண்மை இல்லையெனில், கிறிஸ்தவ மறை அர்த்தமில்லாமல் போய்விடும். (1 கொரிந்தியர் 15:14) நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்த கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை இஞ்ஞாயிறன்று சந்தித்தோம்.

சென்ற வாரம், எரியும் மெழுகுதிரிகளை ஏந்தி, பாஸ்காப் புகழுரையைப் பாடி, இயேசுவின் உயிர்ப்பை அறிக்கையிட்டபோது, நமக்குள் ஒரு நிறைவும் மகிழ்வும் தோன்றியதை உணர்ந்தோம். உயிர்த்த இயேசு இன்று நமக்கு முன் தோன்றினால், உடனே அவர் திருவடி பணிந்து நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட எவ்விதத் தயக்கமும் இருக்காது.

முதல் உயிர்ப்புத் திருவிழாவில் இத்தகைய மகிழ்வு, நிறைவு, உற்சாகம் இருந்ததாகத் தெரியவில்லை. அது ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். சந்தேகம்… உயிர்த்த இயேசுவைச் சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும் அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு… சந்தேகம். இந்த நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக இன்று நாம் நற்செய்தியில் காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.

நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது சந்தேகம்தான். சந்தேகம் ஒரு கூட்டு உணர்வு; பல உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம், நம்பிக்கையின்மை என்ற பல உணர்வுகள் கூட்டுக் குடித்தனம் செய்யும். தோமா இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து, “என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?” என்ற கேள்வியை கேட்டு, “தோமா இப்படி நடந்துகொண்டது தவறு.” என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில் அமர்ந்து தீர்ப்பு எழுதுவது எளிது.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் இன்று வாழும் நமக்கே அந்த உயிர்ப்பு குறித்த நம்பிக்கையில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பு பற்றிய எண்ணங்களில் தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவதும் தவறு.

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். ஆகவே, தீர்ப்புகளை வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுந்து வருவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்ற நிலை உருவாகியிருந்த நேரத்தில், அந்த உலகம், ஆணி வேரோடு வெட்டப்பட்டு சிலுவையில் தொங்கவிடப்பட்டது.

மிகுதி அடுத்த வாரம்…

அருட்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT